நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தனக்கு பவர் ஸ்டார் என்ற பட்டம் எப்படி வந்தது என்பது குறித்த தகவலை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் தான் சட்டென்று ரசிகர்கள் மனதில் இடம் பெறுவார்கள். அந்த வகையில் பவர் ஸ்டார் சீனிவாசனும் ஒருவர். லத்திகா என்ற படம் வெளிவந்ததே அறியாமல் அதன் 100 நாள், 200வது நாள் போஸ்டர்களை பார்த்து யார் இவர் என குழம்பிப் போன ரசிகர்களுக்கு சந்தானம் நடிப்பில் வெளியான “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படம் திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து பல படங்களில் காமெடி, சிறப்பு தோற்றம் உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்து வந்த அவர் தற்போது நேர்காணல் ஒன்றில் பல கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அதில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் நடிகை ஷகீலா, உங்களுக்கு பவர் ஸ்டார் பட்டம் எப்படி வந்தது என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு சீனிவாசன், “சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி நான் 4,5 தொழில் பண்ணிட்டு இருந்தேன். ஆனால் எதுவுமே எனக்கு பெயர், பொருள் கிடைக்காததால் திருப்தி ஏற்படவில்லை. எனக்கு பப்ளிசிட்டி தேவை என்பதால் அதுக்கு என்ன பண்ணலாம் என நீண்ட நாள் யோசித்து பார்த்தேன். அப்புறம் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வேண்டினேன். பெயர், புகழ் வரும் எதாவது எனக்கு சென்னை திரும்பியதும் வேண்டும். அப்படி இல்லைன்னா உங்களை கும்பிட மாட்டேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.
இங்கு வந்ததும் ஒரு பெண் என்னை சந்தித்து சினிமா எடுக்க பைனான்ஸ் பண்றீங்களா என கேட்டார். நான் அதில் எனக்கு ஐடியா இல்லை என சொன்னேன். நீங்கள் சினிமாவை முன்னால் மட்டுமே பார்க்கிறீர்கள். பின்னால் எவ்வளவு பேர் கஷ்டப்படுகிறார்கள் என பார்த்து நீங்க முடிவு பண்ணுங்க. நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அங்கு நடப்பதையெல்லாம் பார்த்து பைனான்ஸ் பண்ணலாம் என முடிவு செய்தேன்.
அந்த படத்தில் எனக்கு சின்ன ரோல் கொடுத்தார்கள். நானும் நடிக்க எனக்கு நடிப்பின் மீது ஆசை வந்தது. அதனால் லத்திகா என்ற படம் எடுத்தேன். ரொம்ப நஷ்டம் ஆயிடுச்சி. தியேட்டர்ல ரிலீசான படம் ஒருநாள் கூட ஓடல. முதல் காட்சி முடிந்ததும் 2 ஆம் காட்சிக்கு கூட்டமே வரல. உடனே என்னுடைய ரசிகர் மன்ற தலைவர்களை அழைத்தேன். அவர்கள் என்னிடம் நான் தியேட்டருக்கு ஒரு 200 பேரை அனுப்புகிறேன். நீங்கள் ஒரு குவார்ட்டர், பிரியாணி, கையில் ரூ.100 கொடுக்க முடியுமா என கேட்டார்கள்.
இப்படி நான் 350 நாட்கள் அந்த படத்தை ஓட்டினேன். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் திருமாளவன் சார் வந்தாரு. அவர் படம் பார்த்துட்டு “பவர் ஸ்டார்” என்ற பட்டத்தை வழங்கினார். அடுத்த நாளில் இருந்து என் பெயர் சீனிவாசன் இல்லாமல் பவர் ஸ்டார் சீனிவாசனாக மாறியது என அந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்துள்ளார்.