என்னுடைய சொந்த அண்ணனே கொலை செய்ய பலமுறை முயற்சி மேற்கொண்டார்  என நடிகர் பொன்னம்பலம் நேர்காணல் ஒன்றில் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் பொன்னம்பலம். கபாலி என பலராலும் நினைவுக்கூரப்படும் அவர் பின்னாளில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பொன்னம்பலம் ஒரு கட்டத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். உடல் எடை குறைந்து நடக்க மிகவும் சிரமப்படும் அவர் நேர்காணல் ஒன்றில் தனக்கென்ன நடந்தது என கூறியுள்ளார். 

அதில், “நான் நன்றாக பலமாக தான் இருந்தேன். ஆனால் குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பொறாமை தான் இவ்வளவுக்கும் காரணம். எங்க அப்பாவுக்கு 4 மனைவிகள். நாங்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக தான் இருந்தோம். நான் சினிமாவில் கொஞ்சம் வளர்ச்சி அடையும்போது என் அண்ணனுக்கு 42 வயதாகி விட்டது. இனிமேல் கல்யாணமாகாது என சொல்லப்பட்ட நிலையில் நீ திருமணம் செய்யாமல் நான் செய்யமாட்டேன் என கூறி வந்தேன். அவர் பாம்குரோவ் ஹோட்டலில் தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருந்தார். நான் எவ்வளவோ பேசி பார்த்தேன். 

Continues below advertisement

என்னிடம் உள்ள சேமிப்பை தருகிறேன். சின்னதா ஏதாவது மண்டபத்தில் வைத்துக் கொள்ளலாம் என கூறி விட்டேன். அவர் கேட்கவில்லை. அந்த ஹோட்டலில் தான் திருமணம் என்பதில் உறுதியாக இருந்தார். அதுதான் வாழ்க்கையில் நான் வாங்கிய முதல் அடி. அதன்பிறகு வருமான வரித்துறை பிரச்னையில் என்னை மாட்டி விட்டார். 

அதன்பிறகு ஒருநாள் இரவில் வீட்டின் அருகில் பள்ளம் தோண்டி எனக்கு சூனியம் வைத்தார். ஏதேச்சையாக இரவு தூக்கம் கலைந்து அதை நான் பார்த்து விட்டேன். எனக்கு தெரிந்த நபரை மிரட்டி அப்படி செய்ய வைத்தார். அந்த நபரை ரசத்தில் ஏதோ பொடி ஒன்றை கலந்து கொடுக்கச் சொன்னார். நான் இதுதொடர்பாக சித்தர் ஒருவரிடம் கேட்டபோது குதிரை முடியை தூள் செய்து கலக்கி விடுவார்கள். 

அது குடலின் உள்ளே போய் ஒட்டிக் கொள்ளும். சாதாரணமாக மனிதர்களின் முடியே வயிறு உள்ளே சென்றால் பேதி ஏற்படும். குதிரை முடி குடலில் ஒட்டி 2 வருடம் தொடர்ச்சியாக பேதி ஏற்பட்டது. இதனால் திடமாக இருந்த உடல் எடை குறைந்தது. அதன்பிறகு பிரஷர், சுகர் வந்தது. இதனால் ஷூட்டிங் செல்ல முடியாமல் போனது. 

இதன்பின்னர் ஒருமுறை என்னுடைய பிறந்தநாள் வந்தது. எப்போதும் நான் குடிப்பதை விரும்பாத அண்ணன் எனக்கு பீர் வாங்கி கொடுத்து குடிக்குமாறு வற்புறுத்தினார். சுற்றியிருந்தவர்கள் கட்டாயத்தால் நான் சிறிது குடித்தேன். மீதியை குடித்த என்னுடைய நண்பர் தொடர்ச்சியாக பேதி ஏற்பட்டு இன்று அவர் உயிருடன் இல்லை. அதில் என்ன கலந்தார் என தெரியவில்லை. நானும் மருத்துவமனை சென்று குடலை பலமுறை சுத்தம் செய்வது சொல்லுங்கள். அது கிட்னி வரை பாதித்து விட்டது. 

உடம்பை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவேன். ஆனால் நான் உருமாறியது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதன்பின் ஒருநாள் நடந்த சண்டையில் என்னை கொலை செய்ய முயற்சி செய்ததை அண்ணன் ஒப்புக்கொண்டார். மனைவிக்கும், அண்ணனுக்கும் நடந்த சண்டையில் என்னை கைகாட்டி மனைவி அவமானப்படுத்தியுள்ளார். அதனால் ஏற்பட்ட கோபத்தில் என்னை அழிக்க அண்ணன் முடிவு செய்திருக்கிறார்” என தெரிய வந்தது.