ஈ படம் பண்ணும்போது நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வை நடிகர் பசுபதி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனைப் பற்றிக் காணலாம். 

Continues below advertisement

எஸ்.பி.ஜனநாதனின் படம்

தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குநர்களில் ஒருவர் என பெயரெடுத்தவர் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். இவர் 2006 ஆம் ஆண்டு “ஈ” என்ற படத்தை இயக்கியிருந்தார். ஜீவா, நயன்தாரா, கருணாஸ், பசுபதி, ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். இப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியான ஜான் லெ கார்ரே நாவலான ‘தி கான்ஸ்டன்ட் கார்டனர்’ அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சமூக பாதிப்பை பிரதிபலிக்கும் வண்ணம் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. 

இந்தப் படத்தில் நடிகர் பசுபதி “நெல்லை மணி” என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அவரின் நடிப்புக்கு பெயர் சொல்லும் படங்களில் இதுவும் ஒன்றாகும். 

Continues below advertisement

போராளி கேரக்டர்

ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பசுபதி, “ஈ படம் யாரைப் பத்தி பேசுதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஒரு போராளியைப் பற்றி பேசுகிறது. பல விஷயத்தை எதிர்த்து போராடுகிற, போராடிக் கொண்டிருக்கிற ஒருத்தனை பற்றி பேசுகிறது. அதுக்கு நிறைய மனிதர்கள் முன்னுதாரணமாக உலகம் முழுவதும் இருக்கிறார்கள். நாங்கள் எடுத்துக் கொண்டது கியூபா நாட்டின் புரட்சியாளர்களில் ஒருவரான சே குவேரா. அவரை கண்டிப்பாக நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். அதை வெளிக்காட்டும் வகையில் தான் நடித்த நெல்லை மணி கேரக்டர் தொப்பி அணிந்திருப்பது போன்று காட்டப்பட்டிருக்கும். 

ஆனால் அதை அணிவதில் எனக்கும், இயக்குநருக்கும் ஒரு முரண்பாடு இருந்தது. நான் அதை வேண்டாம் என இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் சொன்னேன். காரணம், நான் பண்ணும்போது என்னுடைய நடிப்பில் சே குவாரா வெளிக்கொணர வேண்டும். அதை விட்டு விட்டு தொப்பி வைப்பதால் வருவது வேண்டாம் என சொன்னேன். 

ஆனால் எஸ்.பி.ஜனநாதன் என்னிடம், ‘இல்லை நண்பா.எனக்கு அந்த தொப்பி மேல் மிகப்பெரிய காதல் இருக்கிறது. அதனை உங்கள் தலையில் பார்க்கும்போது சே குவேராவை பார்ப்பது போல இருந்தது’ என சொன்னார். சரி உங்க ஆசையை நான் ஏன் கெடுக்க வேண்டும்..தொப்பி இருக்கட்டும் என சொல்லி விட்டேன். 

ஆனால் மொத்த சமூகமும் அந்த கேரக்டரை வில்லனாக தான் பார்த்தது. நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். எனக்கு ஈ படத்துக்கு மாநில அரசின் விருது கிடைத்தது. இந்த கை தட்டும் கிடைக்கும் சந்தோஷம் எனக்கு இல்லை. ஏனென்றால் அந்த விருது வில்லனுக்கு தான் கொடுத்தார்கள். எனக்கு ஹீரோவாக தெரியும் ஒருவர், இன்னொருவருக்கு வில்லனாக தெரிகிறார். இதுதான் வாழ்க்கை” என தெரிவித்துள்ளார்.