தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத நபராக திகழ்பவர் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் அடிப்படையில் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர். இவரது திரைவாழ்வு மற்றும் அரசியல் வாழ்வை பாராட்டி தனியார் யூ டியூப் தொலைக்காட்சி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

Continues below advertisement

இதில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது,

சீமானின் மன வலிமை:

மன வலிமை பற்றி சீமானிடம்தான் பயிற்சி எடுக்க வேண்டும். உடல் வலிமை அவ்வளவு அவசியமான விஷயம். எவ்வளவு ஓடிக்கொண்டிருக்கிறார் என்றால், அவ்வளவு ஓடிக்கொண்டிருக்கிறார். அதற்கு இடையில் உடல் வலிமைக்காக அவர் உடற்பயிற்சியை தவறவிடுவதில்லை. நீங்கள் உடற்பயிற்சி செய்வதை எல்லாம் நான் பார்த்துக்கொண்டே இருப்பேன். இதற்கு எங்கு நேரம் உள்ளது?

Continues below advertisement

நம்மைப் போன்ற ஆட்களுக்கு எல்லாம் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கு சாக்கு போக்கு கிடைக்க வேண்டும். முடிவில்லாமல் உழைக்கும்போதும் உடற்பயிற்சி செய்து கொண்டே இருக்கிறீர்கள். இவரை வெல்ல முடியாத வீரன் என்று சொல்வேன். எல்லா வீரனையும் யாரோ ஒரு காலத்தில் வென்றுவிடுவார்கள். கூட்டணி அமைத்து ஜெயிக்காத வெல்ல முடியாத ஒரு வீரன்.

வார்த்தை ஜாலம்:

 இவர் பேசும்போது எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்பதை விட, இவரையே ஒரு கூட்டமாகத்தான் நான் பார்க்கிறேன். இவர் பேசும்போது  ராயப்பேட்டை மணிகூண்டுகிட்ட பேசினால், அந்த மணிகூண்டே இவர் இன்னும் 2 மணி நேரம் பேசினால் நன்றாக இருக்கும் என்று காத்திருக்கும்.

நீ கோழையாக சாவதை விட ஏழையாக சாவதே மேல், தனியாக எடுத்தால் பிச்சை, நாட்டோடு சேர்ந்து எடுத்தால் இலவசம் என்று இந்த மாதிரி வார்த்தை ஜாலங்கள்தான் நம்மை கவரும். இதுதான் அவரிடம் நான் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். மணிக்கணக்காக பேசியும், மணி மணியாக எப்படி பேசுகிறீர்கள்?

மண்டை காயாது:

அவர் எவ்வளவு பேசினாலும் தொண்டைதான் கொஞ்சம் காயுமே தவிர, மண்டை காயுறதே கிடையாது. நான் ரொம்ப உணர்வூப்பூர்வமான மனிதன். சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் சோர்ந்துவிடுவேன். தோல்வியைக் கண்டு துவண்டு போகுறோம். நீங்கள் எத்தனை தோல்விகளை கண்டுள்ளீர்கள். ஆனால், அந்த தோல்வியை எல்லாம் வெற்றிக்கான படிக்கட்டுகளாகத்தான் பார்க்கிறீர்கள். சீமானைப் போல தமிழ் பேசுவது சிரமமான விஷயம்.

இதுவரை சினிமாவில் சில படங்களை நான் தவறவிட்டிருக்கிறேன். அதைப்பற்றிய வருத்தங்கள் எனக்கு இல்லாமல் இருந்திருக்கு. நான் தவறவிட்ட ஒரு படம் சீமான் இயக்கத்தில் காதல் ஒழிக. அப்படி ஒரு படத்தை நான் தயாரிப்பது என்று வந்து, அவர் இயக்கத்தில் நான் நடிப்பது என்று பேச்சுவார்த்தைகள் நடந்து அது நடைபெறாமல் போய்விட்டது. அது எப்போதும் எனக்கு ஒரு வருத்தமாக இருக்கிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.