ராஜராஜ சோழனை பார்ப்பதற்காக நடிகர் பார்த்திபன் தஞ்சாவூருக்கு வர உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.
அதனைத்தொடர்ந்து 'பொன்னி நதி' பாடல் வெளியிடப்பட்டது. இந்தப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சோழா சோழா பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். ட்ரெய்லர் மக்களுக்கு பிடித்துப்போன அதே வேகத்தில் பிரோமோஷனை ஆரம்பித்தது பொன்னியின் செல்வன் படக்குழு.
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழு, தொடர்ந்து ஹைதராபாத், மும்பை, டெல்லி என பறந்தது. அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே படப்பிடிப்பு சம்பந்தமான போட்டோக்களும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில் ஆயிரத்தில் ஒருவன் சோழன் கதாபாத்திரம் போல பேசியிருக்கும் அவர், மக்காள் இன்று தொட்டு மூன்றாம் பகல் 30 ஆம் தேதியன்று தஞ்சை மண்ணில் யாம் பொன்னியின் செல்வனை காண பிராயணிக்க உள்ளோம். காரிலா.. ட்ரெயினிலா என்பது முடிவாக வில்லை. 10 நூற்றாண்டு பெருமை.. நம் ராஜராஜ சோழனை சரியாக 11 மணிக்கு சந்திக்க உள்ளோம்.. இப்படிக்கு சின்ன பழுவேட்டையர்.” என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.