நடிகர் விஜய் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அவரை வாழ்த்தி நடிகர் பார்த்திபர் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் முதல் படமான நாளைய தீர்ப்பு வெளியானது. விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படத்தை இயக்கியிருந்தார். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் விஜய் நடித்திருந்தாலும் ஹீரோவாக அவர் நடித்த முதல் படம் இதுதான். இப்படத்தை பார்த்த பலரும் ‘இவரெல்லாம் யார் நடிக்கணும்ன்னு ஆசைப்பட்டது’ என கிண்டல் செய்தனர். ஆனால் இன்றோ தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் விஜய்யும் ஒருவர்.
இந்த 30 ஆண்டுகளில் விஜய் நடிப்பில் 65 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் வெற்றி, தோல்வி என இரண்டும் இருந்தாலும் இன்றும் பேமிலி ஆடியன்ஸ், குழந்தைகள் மத்தியில் விஜய்க்கான மாஸ் என்பது பெரிதாகவே உள்ளது. இதுவே அவரது படங்களின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. நடிப்பு தவிர்த்து பாடகராகவும் விஜய் தனது திறமையை வெளிப்படுத்துவதால் அவரது ஒவ்வொரு படத்திலும் என்ன பாடல் பாடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழும்.
அடுத்ததாக விஜய் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கும் நிலையில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. பொங்கல் வெளியீடாக வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரஞ்சிதமே பாடலை விஜய் பாடியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் ‘தீ தளபதி’ பாடல் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி வெளியானது. இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகமானார்கள். மேலும் விஜய் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் விஜய்யின் இந்த திரையுலகப் பயணம் குறித்த தங்கள் நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
இந்த நிலையில் நடிகரும், இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ‘மூப்பது முட்டாத முப்பது-இனி தோற்பது கிட்டாத ரசிகர்களின் தோப்பது! நண்பர் தளபதி விஜய் அவர்களின் இன்னும் முப்பதும் கடக்கும் இன்னொரு வாரிசே இல்லாத இமாலய வெற்றிக்கு வாழ்த்துகள்!’ என கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் வழக்கம்போல பார்த்திபனின் வார்த்தை ஜாலம் புரியாமல் குழம்பி போயுள்ளனர்.