’இரவின் நிழல்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கோபமடைந்த பார்த்திபன் மைக்கை தூக்கி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து பார்த்திபன் மன்னிப்பு கோரி இருக்கிறார். 


பார்த்திபன் இயக்கு நடித்திருக்கும் ‘இரவின் நிழல்’ திரைப்படம், 96 நிமிடங்கள் ஓடக்கூடியது. மேலும், இப்படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நினைவு பரிசாக அவரது தாய் மற்றும் தந்தை உருவப்படம் பதிக்கப்பட்டுள்ள இசை வடிவ கேடயத்தை இயக்குநர் பார்த்திபன் வழங்கினார்.


நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பேசிய இயக்குநர் பார்த்திபன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாடல் பற்றி சொல்லுங்கள் என்று கேட்க, ஏ.ஆர்.ரஹ்மானோ  ட்ராமால்லாம் வேண்டாம். பாடலை திரையிட்டு விடலாம் என்றார். அப்போது பார்த்திபனின் மைக் வேலை செய்ய வில்லை என்று தெரிகிறது. இதனால் கோபமடைந்த பார்த்திபன் மைக்கை கீழே இருந்தவரை நோக்கி வீசினார். இதைப்பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து மேடையில் பேசிய பார்த்திபன் ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானின் கொடுத்த கேடயத்தை தூக்கி வந்ததால் கை மிகவும் வலியாக இருந்தது. அந்த நேரத்தில் மைக் வேலை செய்ய வில்லை என்றதும் கோபம் வந்து விட்டது. ஆனால் இது அநாகரிகமான விஷயம்தான் என்னை மன்னித்துவிடுங்கள் என்று பேசினார்.  


நிகழ்ச்சியில் இயக்குநர் சமுத்திரகனி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குநர் கரு பழனியப்பன்  மற்றும் பாடகி ஷோபனா சந்திரசேகர், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 



அதனை அடுத்து, பார்த்திபனின் இச்செயலுக்கு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், தனியார் யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “ரஹ்மான் சார் இப்படத்தின் பலம். அவரை மேடை ஏற்றி உட்கார வைத்திருந்தபோது சர்வ ஜாக்கிரதையாக அனைத்து விஷயங்களும் நடந்துவிட வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. ஆனால், அப்படி நடக்கவில்லை என்பது எனக்கு கவலையை தந்தது. நிகழ்ச்சியில் நடந்த இந்த விஷயத்திற்காக ஏ.ஆர் ரஹ்மான் சாருக்கு- மிகப்பெரிய மன்னிப்பு கேட்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். ரோபோ சங்கர் சாருக்கும் மன்னிப்பு கேட்டு அனுப்பினேன். இவை அனைத்தும் வைரல் ஆக வேண்டும் என்பதற்காக செய்யவில்லை. அப்படி வைரலாக வேண்டும் என நினைத்து செய்திருந்தால், இப்போது நடந்திருக்கும் விஷயங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்திருப்பேன்” என தெரிவித்திருக்கிறார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண