சேரிப்பகுதிகள் குறித்து நடிகை பிரிகிடா தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். இவர் தற்போது எழுதி இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “ இரவின் நிழல்”. உலகிலேயே முதல், “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவான இந்தப்படம் கடந்த ஜூலை 15 ஆம் திரையரங்குளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இந்த படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனிடையே பார்த்திபனிடம் உதவி இயக்குநராக வேலை செய்ய வந்த பிரிகிடாவுக்கு இரவின் நிழலில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்தப்படத்தில் நிர்வாண காட்சி ஒன்றிலும் அவர் நடித்திருந்தார்.
இதற்கிடையில் பிரிகிடா அளித்த பேட்டி ஒன்றில், 18 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்க கூடிய படங்களை அனைவரும் பார்க்க ஆரம்பித்து விட்டனர். படத்தில் அவ்வளவு கெட்ட வார்த்தை இருக்க கூடாதுதான். இங்கு ஒருவனது வாழ்கையில் கெட்டது மட்டுமே நடந்திருக்கிறது. அப்படியானால் அவனது வாழ்கையை அப்படித்தான் சொல்ல முடியும். சேரிகளுக்கு போனால் நாம் அந்த மாதிரியான வார்த்தைகளைத்தான் கேட்க முடியும். சினிமாவுக்காக ரொம்பவும் மாற்றி விட முடியாது. மக்களுக்கே தெரியும் அங்கு போனால் எப்படி பேசுவார்கள் என்று.. அந்த மாதிரியான விஷயங்களை இந்தப்படத்தில் தவிர்க்கவே முடியாது என கூறியிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது. பலரும் பிரிகிடாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரிகிடா தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அந்த வார்த்தைகளை சொன்னதற்கு நான் வருந்துகிறேன்! இரவின் நிழல் படத்தில் இடம் மாறும்போது, மொழியும் மாறுகிறது என்பதைத் தெரிவிக்க முயற்சித்தேன். அதற்காகநான் ஒரு தவறான உதாரணத்தை எடுத்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
இதனை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே! என கூறியுள்ளார். இதன்மூலம் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்