நிறைவேறாத காதலின் மேல் எப்போது நமக்கு ஒரு பூரிப்பு இருக்கும் என்று பார்த்திபன் கூறினார்
அழகி
தங்கர் பச்சன் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளியான அழகி படம் 22 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதனை முன்னிட்டு இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. அழகி படத்தின் படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் அழகி படத்தில் நடித்த இயக்குநர் பார்த்திபன் , நடிகை தேவயானி, தயாரிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். இயக்குநர் தங்கர் பச்சன் தற்போது தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதால், அவரால் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை தேவயானி அழகி படத்தைப் பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
யாருமே நினைச்சுக்கூட பார்க்கல..
நிகழ்ச்சியில் பேசிய தேவயானி “அழகி படம் நடிக்கும்போது 22 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படம் மீண்டும் இப்படி ரிஸீசாகும் என்று யாருமே நினைத்து பார்க்கல. இப்படியான ஒரு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் உதயகுமார் அவர்களுக்கு நான் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காதல் கோட்டை படத்தில் நான் நடித்தபோது தங்கர் பச்சன்தான் அந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். அவருடைய ஒளிப்பதிவில் நடிக்கும்போது நாம் மேக்-அப் போட தேவையில்லை. ஒரு ஓவியம் மாதிரி அவரது காட்சிகள் அழகாக இருக்கும் . எனக்கு திருமணம் ஆன புதிதில் அழகி படத்தின் கதையை தங்கர் பச்சான் என்னிடம் சொன்னார். எனக்கு கதை ரொம்ப பிடித்திருந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தப் படம் மீண்டும் வெளியாவது எங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை சந்திக்க வைத்திருக்கிறது. இப்போது நான் என்னுடைய மகள்களுடன் சென்று பார்க்கப் போகிறேன். எனக்கு இது மிகவும் புதுமையானதாக அனுபவமாக இருக்கப்போகிறது“ என்று பேசினார்.
தனம் பிடிக்குமா? வளர்மதி பிடிக்குமா?
தொடர்ந்து பேசிய தேவயானி இப்படத்தில் நடித்த பார்த்திபனிடம், உங்களுக்கு தனம் பிடிக்குமா? வளர்மதி பிடிக்குமா? என்கிற கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த நடிகர் பார்த்திபன் ”காதலியை காதலிப்பது என்பது ஒரு எளிமையான விஷயம். தோல்வியடைந்த காதல் என்பதே தெய்வீக காதல் தான். நிறைவடையாத காதல் நம்மை விட்டு எப்போதும் செல்வதில்லை. அதனால் காதலியை விட நம் வாழ்க்கையில் புதிதாக வந்த மனைவியை காதலிப்பது என்பது சவாலானது. நம்முடைய எல்லா குறைகளையும் ஏற்றுக்கொண்டு இருக்கும் ஒருவரை காதலிப்பதுதான் அழகானது. அந்த கதாபாத்திரத்தை தேவயானி சிறப்பாக செய்திருந்தார்” என்று பார்த்திபன் கூறினார்