தனுஷ்
இந்திய திரையுலகில் மிக திறமையான நடிகர்களில் ஒருவராக தனுஷ் கருதப்படுகிறார். தற்போது குபேரா படத்தில் நடித்தும் இட்லி கடை படத்தை இயக்கியும் இருக்கிறார். இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படமும் , லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார் தனுஷ். தனுஷ் பற்றி நடிகரும் இயக்குநருமான ஆர் பார்த்திபன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்
ஆடுகளம் படத்தில் பார்த்திபன் நடிக்க வேண்டியதா ?
" தனுஷூடன் ஒரு படம் பண்ணச் சொல்லி செல்வராகவன் என்னிடம் சொன்னார். அப்போது வெற்றிமாறன் இயக்கவிருந்த ஆடுகளம் படத்தில் பேட்டக்காரன் கதாபாத்திரத்தில் நடிக்க வெற்றிமாறன் என்னை கன்வின்ஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த கேரக்டர் இவ்வளவு வயதானதாக எழுதப்படவில்லை. நானும் தனுஷும் சேர்ந்து நடிப்பதற்கு ஒரு கதை வைத்திருந்தேன். இருவரும் சந்தித்து பேசினோம். நான் சீனியர் என்பதால் தனுஷ் என்னுடன் நடிக்க தயங்குவதாக செல்வராகவன் சொன்னார். அப்போதுதான் எனக்கு நான் இதேமாதிரி ஒருமுறை செய்தது நினைவுக்கு வந்தது.
தன்வினை தன்னைச் சுடும்
புதிய பாதை படம் வெளியானபோது இயக்குநர் ஶ்ரீதர் என்னை அவர் படத்தில் நடிக்க அழைத்தார். இந்தியில் அந்த படத்தில் ஷாருக் கான் நடிக்க இருந்தது. தமிழில் என்னை தேர்வு செய்திருந்தார். ஜாகிஸ் ஹூஸ்ஸைனின் தபெலாவை வைத்து எழுதப்பட்ட ஒரு காதல் கதை. நானும் கதை கேட்டேன் நல்லா இருந்தது. ஆனால் ஶ்ரீதர் சார் படத்தில் நடிக்க எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. நாம் நமக்கு தெரிந்தபடி நாமே டயலாக் சொல்வது என ஏதோ எடுத்து வருகிறோம். அந்த மாதிரியான ஒரு இயக்குநர் படத்தில் நடிப்பதை நினைத்தால் பயமாக இருந்தது அதனால் நோ சொல்லிவிட்டேன். அதுதான் இன்று எனக்கு திருப்பி வருகிறது என நான் எடுத்துகிட்டேன்" என பார்த்திபன் தெரிவித்துள்ளார்
குபேரா
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் , ராஷ்மிகா மந்தனா , நாகர்ஜூனா ஆகியோர் நடித்துள்ள குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தேவிஶ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தின் மூலம் தனுஷ் நேரடியாக தெலுங்கு திரையுலகில் களமிறங்க இருக்கிறார்.