நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான புலி திரைப்படம், அந்நாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. பிரம்மாண்டமான பொருட்செலவு, நட்சத்திர பட்டாளம், ஃபேண்டஸி கதைக்களம் என பல அம்சங்களுடன் வெளியான இப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளர்  நட்டி, யூடியூப் நேர்காணலில் புலி திரைப்படத்தின் தோல்விக்கான காரணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Continues below advertisement

அந்த நேர்காணலில் பேசிய நட்டி, "புலி ஒரு நல்ல முயற்சி. ஆனால் அந்தப் படம் தப்பாக பப்ளிசிட்டி செய்யப்பட்டதாக எனக்குத் தோன்றியது. விஜய் சார் இந்த கதையை என்னிடம் கொண்டு வந்தபோதே இந்த படத்தை தன்னுடைய 8 முதல் 15 வயது ரசிகர்களுக்காக நடிப்பதாக கூறினார். அதற்கு ஏற்ற விதமாக படத்தில் நிறைய ஃபேன்டஸி அம்சங்கள் இருந்தன. ஆனால் இந்த படத்தை விளம்பரப் படுத்தியபோது மிகப்பெரிய ஆக்‌ஷன் திரைப்படமாக விளம்பர படுத்தினார்கள்.  படம் என்ன சொல்ல வருகிறது என்பதைவிட வேறு மாதிரியான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கிவிட்டார்கள். அதனால்தான் படம் வெளியாகியபோது பலருக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது. இது குழந்தைகளுக்கான படம் என்று முன்பே சொல்லி விளம்பரப்படுத்தி இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்காக மொத்த குடும்பமுமே திரையரங்கத்திற்கு வந்திருக்கும் . படத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம் என்பதும் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய அம்சம். புலி விஷயத்தில் அதுதான் நடந்தது என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

2015-ஆம் ஆண்டு வெளியான புலி திரைப்படத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, சுதீப், பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அப்போது தமிழ் சினிமாவில் அரிதாக உருவாகியிருந்த ஃபேண்டஸி படங்களில் ஒன்றாக புலி பார்க்கப்பட்டது. இருப்பினும், திரைக்கதை, கிராபிக்ஸ் தரம் மற்றும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்ற விமர்சனங்கள் படத்திற்கு எதிராக எழுந்தன. அதோடு, வெளியீட்டுக்கு முன்பு நடந்த வருமான வரித்துறை சோதனை, வெளியீட்டு தாமதம் உள்ளிட்ட சம்பவங்களும் படத்தைச் சுற்றி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.