மத்திய அரசின் அக்னிபத் திட்டம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. பல்வேறு முனைகளில் இருந்து இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு இந்தத் திட்டத்தை திரும்பப்பெற முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த சர்ச்சையில் தன் பங்குக்கு கருத்தை பதிவு செய்துள்ளார் நடிகரும் இயக்குநருமான நட்டி என்கிற நட்ராஜ் .இது குறித்த அவருடைய ட்விட்டர் பதிவில் “இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன்..தேசமே தெய்வம்..” எனத் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் நடராஜ் சதுரங்க வேட்டை படத்தில் பேசிய வசனத்தை இதற்கு கமெண்ட்டாக சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இராணுவத்தில் இடமில்லை என மத்திய அரசின் ராணுவ விவகாரங்கள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய பாதுகாப்பு துறையின் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அக்னிபத் என்ற திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் இளைஞர்கள் இதில் பணியமர்த்தப்படுவார்கள். குறைந்தது 17 வயது முதல் அதிகப்பட்சமாக 23 வயது வரையள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலும் இந்த 4 ஆண்டுகால பணிக்கு பின் பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் சேவா நிதி பேக்கேஜ் வழங்கப்படும். இது வட்டியுடன் சேர்த்து 11.71 லட்சம் ரூபாயாக கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார், ஹரியானா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் போராட்டம் வன்முறையாக மாறி ரயிலுக்கு தீ வைப்பு உட்பட பல பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பல இடங்களில் போராட்டத்தை தடுக்க இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.தமிழகத்திலும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அக்னிபத் திட்டம் முப்படையில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் சேர வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் ராணுவ விவகாரங்கள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் பல ஆண்டாக வலியுறுத்தப்பட்டு வரும் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது திரும்ப பெறமாட்டாது எனவும் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்யும் அக்னிபத் வீரர்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கப்படும்.
ராணுவத்தில் சேர ஒழுக்கம் மிக மிக அவசியம் எனவும், வன்முறை போன்ற நாச வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு இராணுவத்தில் இடமில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். இத்திட்டத்தில் சேர நினைப்பவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடவில்லை என காவல்துறை சான்று பெற்று தந்தால் மட்டுமே இராணுவத்தில் சேர முடியும் எனவும் அனில் பூரி தெரிவித்துள்ளார். அதன் பின் பேசிய கடற்படை துணை தளபதி தினேஷ் திரிபாதி, அக்னிபத் திட்டத்தின் மூலம் பெண்களும் கடற்படையில் சேரலாம் என தெரிவித்தார். இதேபோல் இந்த திட்டத்தின் கீழ் விமானப்படையில் பெண்களும் ஜூன் 24 ஆம் தேதி சேர்க்கப்படுவர் என ஏர் மார்ஷல் ஏ.கே.ஷா கூறியுள்ளார்.