தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் அவர்களின் பயணத்தை பல அவமானங்கள், தடங்கல்கள், போராட்டங்களுக்கு பிறகே அடைந்துள்ளனர். அப்படி பல அவமானங்களுக்கு பிறகு தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் நகுல்.


90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தேவயானியின் தம்பிதான் நகுல். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' திரைப்படத்தில் அறிமுகமான நகுல், தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரின் பயணம் எப்படிப்பட்டது என்பதை அவரே நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


 



 


'பாய்ஸ்' படத்தில் நடித்த சித்தார்த், பரத், தமன் உள்ளிட்டோர் செலிப்பிரிட்டிகளாக இருந்தும் வரும் நிலையில் அதில் நண்பர்களில் ஒருவராக பருமனான தோற்றத்தில் நடித்த நடிகர் நகுல் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக காத்துகொண்டு இருந்த சமயத்தில் பலரிடம் சென்று நான் ஒரு ஹீரோவாக வேண்டும் என்றால் நான் என்ன செய்யணும் என கேட்டுள்ளார்.


நண்பர்கள் உட்பட பலரும் நேர்மையாக வந்து "நீ முதலில் கண்ணாடி பாரு நகுல்" என கூறியுள்ளனர். அதை கேட்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அதை ஒரு சவாலாக  எடுத்துக்கொண்டு சாவதற்கு முன்னர் எப்படியாவது ஒரு படத்திலாவது ஹீரோவாக நடித்து விட வேண்டும் என்பதை சவாலாக எடுத்துக்கொண்டேன். அதற்காக நானாகவே கடுமையாக உழைக்க துவங்கினேன். அந்த சமயத்தில் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நேர்காணலில் கலந்து கொண்டபோது அதை பார்த்த இயக்குநர் என்னை நேரில் வந்து பார்க்க சொல்லி திரைப்பட வாய்ப்பு கொடுத்தார் என பேசி இருந்தார் நடிகர் நகுல். 






காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நகுல் அதை தொடர்ந்து மாசிலாமணி, நான் ராஜாவாக போகிறேன், , கந்தகோட்டை, வல்லினம், நாரதன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், எரியும் கண்ணாடி, செய், பிரம்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


ஒரு நடிகர் மட்டுமின்றி பின்னணி பாடகராக ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். அந்நியன் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'காதல் யானை வருகிற ரெமோ...' பாடலை நகுல் தான் பாடியுள்ளார் என்பது பலரும் அறியாதது.


அது தவிர வேட்டையாடு விளையாடு, கஜினி, கந்தக்கோட்டை உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடியுள்ளார். அது தவிர சில சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக இருந்துள்ளார் நகுல் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தனக்கு ஏற்பட்ட அவமானங்களை ஏணிப் படிகளாக மாற்றி வெற்றி கண்டவர் நடிகர் நகுல். இன்றும் அவர் விடாமுயற்சியுடன் நல்ல ஒரு டர்னிங் பாண்ட் படத்திற்காக காத்துகொண்டு இருக்கிறார்.