அஜித்தின் மங்காத்தா திரைப்படம் 15 ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மங்காத்தா ரிலீஸை ஒட்டி படத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. படத்தில் அர்ஜூன் நடித்த கதாபாத்திரத்தில் முன்னதாக நாகர்ஜூனா நடிக்க இருந்ததாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்

Continues below advertisement

மங்காத்தா ரீரிலீஸ் 

அஜித்தின் 50 ஆவது படமாக கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. அர்ஜூன் , த்ரிஷா , ஆன்ட்ரியா , பிரேம்ஜி , மகத் , வைபம் ஆகிய பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 15 ஆண்டுகள் கழித்து இப்படம் தற்போது திரையரங்கில் மீண்டும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மங்காத்தா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது அஜித் இந்த படத்தில் வழக்கமான ஹீரோவாக இல்லாமல் கதையில் வில்லனாகவே நடித்தார். அஜித்தின் மேன்ரிஸம் , பைக் ரேஸிங் காட்சிகள் , யுவனின் இசை , எதிர்பாராத ட்விஸ்ட் என அஜித் ரசிகர்கள் இன்றுவரை கொண்டாடும் படமாக இருந்து வருகிறது மங்காத்தா. இப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். 

மங்காத்தா உருவான விதம் 

ஹாலிவுட் இயக்குநர் குயிண்டன் டாரண்டினோ இயக்கிய ரிசர்வயர் டாக்ஸ் படத்தை தழுவி இப்படத்தை தான் இயக்கியதாக வெங்கட் பிரபு தெரிவித்தார். முன்னதாக இப்படத்தில் சத்யராஜ் , ஜீவா , விவேக் ஓப்ராய் போன்ற நடிகர்களை நடிக்க வைத்த திட்டமிட்டிருந்ததாகவும் அஜித் இந்த படத்திற்குள் வந்ததும் நடிகர்கள் மாற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

Continues below advertisement

கதை கேட்டு அஜித் கொடுத்த ரியாக்‌ஷன் 

மங்காத்தா படத்தின் கதையை கேட்ட அஜித் படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால் இந்த கதாபாத்திரம் நிறைய கெட்ட வார்த்தைகள் பேசும். இதனால் அஜித்தின் ரசிகர்களுக்கு படம் பிடிக்காமல் போகலாம் என வெங்கட் பிரபு தயக்கம் காட்டியுள்ளார். இதற்கு அஜித் " சார் நான் ஒரு நடிகன் . நானும் எத்தனை நாள்தான் மக்களை காப்பாற்றும் ஹீரோவாக மட்டுமே நடிப்பது. ஒரு நடிகனாக நான் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் எனக்கு சுவாரஸ்யம் அளிக்கிறது. நான் என்ன சி.எம் ஆகனும்னா ஆசைப்படுறேன் கெட்டவனாக நடிக்காமல் இருக்க ' என அஜித் கூறியுள்ளார். 

அர்ஜுன் கதாபாத்திரத்தில் நாகர்ஜூனா

அதேபோல் படத்தில் அர்ஜூன் நடித்த கதாபாத்திரத்தில் முன்னதாக நாகர்ஜூனாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு. தெலுங்கு ரசிகர்களிடையேயும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று அவர் கருதினார். ஆனால் சம்பளம் மற்றும் கால்ஷீட் காரணங்களால் நாகர்ஜூனா இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பின் அர்ஜூனிடம் கதை சென்றது. கதையில் தனக்கு பெரியளவில் முக்கியத்துவம் இல்லை என்று உணர்ந்தாலும் அர்ஜூன் இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். மங்காத்தா படத்தின் வெற்றிக்குப் பின் தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றியைக் கண்டு அர்ஜூன் தன்னை பாராட்டியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.