தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது திறமையால் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் ஊதியம் பெறுகிறார்கள். இதனால், தங்கள் வருவாயில் அவ்வப்போது உதவி தேவைப்படும் ரசிகர்களுக்கும் உதவி வருகின்றனர்.
உதவி கேட்ட ரசிகர்:
ரஜினி, அஜித், சூர்யா என பலரும் இதுபோன்று செய்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய்யும் அரசியலுக்கு முன்பு இதுபோன்று செய்து வந்தார். இந்த சூழலில், எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் பெண் நோயாளி ஒருவரின் அறுவை சிகிச்சைக்காக ஒரு லட்ச ரூபாய் சிகிச்சைக்காகத் தேவைப்பட்ட நிலையில் அவர் உதவி கோரி பதிவிட்டார்.
50 ஆயிரத்தை அள்ளிக்கொடுத்த ஜிவி பிரகாஷ்:
அவரது பதிவைப் பார்த்த நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தன்னால் இயன்ற உதவியாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கியுள்ளார். இன்று மாலை அதில் உதவி கோரியிருந்த மகாலட்சுமி என்ற வங்கி எண்ணுக்கு ரூபாய் 50 ஆயிரம் அறுவை சிகிச்சைக்கான நிதியாக வழங்கியுள்ளார். இந்த ஸ்கிரின்ஷாட்டையும் பதிவிட்டு தன்னால் இயன்ற சிறு உதவி என்று பதிவிட்டுள்ளார்.
ஜிவி பிரகாஷின் இந்த உதவிக்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். ஜிவி பிரகாஷ் அவ்வப்போது பலருக்கும் இதுபோன்ற உதவிகளை செய்து வருகிறார். ஜிவி பிரகாஷ் மட்டுமின்றி சாமானியர்கள் பலரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர்.
