சக்திமான்
1997ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பாகி குழந்தைகளிடம் பிரபலமானத் தொடர் சக்திமான். கிட்டதட்ட சூப்பர் ஹீரோ என்றவுடன் 90ஸ் கிட்ஸ்களுக்கு நினைவுக்கு வருவது சக்திமான் தான். கடந்த 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த தொடரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி எனப்படும் சக்திமான் கேரக்டரில் நடிகர் முகேஷ் கண்ணா நடித்திருந்தார். மேலும் வைஷ்ணவி, கிடு கித்வானி, டாம் ஆல்டர், ஷிகா ஸ்வரூப், கஞ்சேந்திர சௌஹான் ஆகியோரும் இந்த தொடரில் நடித்திருந்தனர். சக்திமான் காப்பாற்றுவார் என சொல்லி பல குழந்தைகள் விபரீத செயல்களில் ஈடுபட்டது என பல விமர்சனங்களை சந்தித்தாலும் கொரோனா ஊரடங்கின் போது சக்திமான் தொடர் மறுஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து முகேஷ் கன்னாவுடன் இணைந்து சோனி நிறுவனம் சக்திமான் தொடரை படமாக எடுக்க முடிவு செய்தது. 3 பாகங்களாக எடுக்கப்படவுள்ள இந்த படத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாகவும் மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் இந்த படத்தி இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
சக்திமான் டீசர்
ஒரு பக்கம் சக்திமான் படத்தின் திரைக்கதை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் முகேஷ் கண்ணா சக்திமான் புதிய தொடருக்கான டீசரை வெளியிட்டுள்ளார். நரைமுடியுடன் சக்திமான் காஸ்டியூமை மாட்டிக்கொண்டு ஒரு பள்ளியில் குழந்தைகளுக்கு இந்தியன் தாத்தா ஸ்டைடில் தேசப்பற்றைப் பற்றி பாடம் எடுக்கும் விதமாக இந்த டீசர் அமைந்துள்ளது. இந்த புதிய தொடர் குறித்து நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்தபோது " இன்றை தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் கண்மூடித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒரு கனம் நிறுத்திவைத்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று சொல்ல வேண்டும் . உண்மையான ஞானம் என்பது என்னவென்பதை மக்களுக்கு உணர்த்துவது தான் சக்திமானின் நோக்கம்" என முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்
90ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான சூப்பர்ஹீரோவாக இருந்தாலும் இன்றைய சூழலில் சக்திமான் ரசிகர்களை கவர்வாரா என்பது சந்தேகம் தான். இந்தியன் 2 படத்தில் இந்தியன் தாத்தா திரும்பி வந்து தேசப்பற்றைப் பற்றி லெக்ச்சர் எடுப்பது போல் சக்திமானும் தேசத்தலைவர்கள் பற்றி பேசி மொக்கைப்போடப் போகிறாரோ என்கிற அச்சமும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது