நடிகர் மோகன்லால் நிகழ்ச்சி ஒன்றில் எம்ஜிஆர் பாடல்களில் மிகப்பெரிய அளவில் பிரபலமான "நான் ஆணையிட்டால்" பாடலை அழகாக பாடி இருப்பார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


1965 ஆம் ஆண்டு ராமு வீடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கான எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியானது. விஜயா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பி.நாகிரெட்டி தயாரித்த இந்த படத்தை சாணக்யா இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி,நம்பியார் நாகேஷ், கே.ஏ.தங்கவேலு, பண்டரி பாய், எஸ்.பி.ரங்காராவ், எல்.விஜயலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தார். 


எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய “நான் ஆணையிட்டால்” பாடல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. குறிப்பாக அஇஅதிமுக தொண்டர்களுக்கும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்களுக்கும் இப்பாடல் தேசிய கீதங்களில் ஒன்றாக அமைந்திருந்தது. அப்படியான பாடலை நடிகர் மோகன்லால் நிகழ்ச்சி ஒன்றில் பாடிய பழைய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 






திரையுலகை பொறுத்தவரை தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகை அவ்வளவு எளிதில் பிரித்து பார்த்து விட முடியாது. அந்த அளவுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாகவே இன்றளவும் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள பிரபலங்களுக்கு, மலையாள திரை பிரபலங்களுக்கு இணையாக ரசிகர்கள் உள்ளது அனைவருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்று. அப்படியான மலையாள திரையுலகில் “கம்ப்ளீட் ஆக்டர்” ஆக வலம் வருபவர் தான் மோகன்லால். 


லால் ஏட்டன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அவர் தமிழில் இருவர், சிறைச்சாலை, அரண், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பரீட்சையமானவர். ஹீரோவாக மட்டுமல்லாமல் எந்த வேடம் கொடுத்தாலும் அதில் தன்னுடைய நடிப்புத்திறமையை காட்டி விடுவார். அப்படிப்பட்ட மோகன்லால் கடைசியாக தமிழில் ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” படத்தில் கேமியோ ரோலில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். 


மேலும் மலையாளத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசப்புடன் அவர் 4வது முறையாக இணைந்த “நேரு” படம் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில்  பிரியாமணி , அனஸ்வர ராஜன் , சித்திக் , சங்கர் இந்துசூடன், சாந்தி மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.