நடிகர் மன்சூர் அலிகான் எஸ்ஐஆர் குறித்து கருத்து தெரிவிப்பதற்காக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் பிக்பாஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,
பிக்பாஸ் ஒரு கருமம்:
"நான் உங்களை எதுக்கு கூப்பிட்டேன். நீங்க பிக்பாஸிற்கு எதுக்கு போறீங்க? நீங்க அதை ஏன் பாக்குறீங்க? நான் அந்த கருமத்தை பாக்குறதே இல்ல. எவனோ எவன்கூடயோ கட்டிப்பிடிச்சுக்கட்டும். பன்னிகள் எல்லாம் போயி, பன்னி மாதிரி சேத்த்துல உக்காந்து புரண்டா, புரண்டுட்டு போகட்டும்.
நீங்க ஏன் பாக்குறீங்க? நல்ல சீரியல் பாருங்க. சன் டிவி பாருங்க. அந்த கருமத்தை ஏன் பாக்குறீங்க? 9 மணிக்கு படுத்து தூங்கிடுங்க. பிரம்ம முகூர்த்தத்துல 3 - 5 எந்திரிங்க. வாழ்க்கை ஜாலியா இருக்கும். ஏதோ அவங்க பொழப்பை ஓட்றாங்க."
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் களம்:
நடிகர் மன்சூர் அலிகான் நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் உள்ளார். இவர் மக்களவைத் தேர்தல்களில் தினகரனுக்கு எதிராக 1999ம் ஆண்டு பெரிகுளம் தொகுதியில் புதிய தமிழகம் சார்பில் போட்டியிட்டு தோற்றார்.
பின்னர், 2009ம் ஆண்டு சுயேட்சையாக திருச்சியிலும், 2019ம் ஆண்டு நாம் தமிழர் சார்பாக திண்டுக்கல் தொகுதியிலும், கடந்த 2024ம் ஆண்டு சுயேட்சையாக வேலூர் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார். 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் தொண்டாமத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த அனைத்து தேர்தலிலும் இவர் தோல்வியே அடைந்துள்ளார்.
கோபம்:
இன்னும் 4 மாதங்களில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். எஸ்ஐஆர் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் இந்த சந்திப்பை நடத்தினார். ஆனால், திடீரென பிக்பாஸ் பற்றி கேள்வி எழுப்பியதும் மன்சூர் அலிகான் கோபம் அடைந்தார்.
ஒவ்வொரு பிக்பாஸ் சீசன் வரும்போதும் போட்டியாளராக மன்சூர் அலிகான் உள்ளே செல்வார் என்று தொடர்ந்து தகவல் வெளியாகுவது வழக்கம். இந்த முறை அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கருமம் உள்ளிட்ட தகாத வார்த்தையில் மிக கடுமையாக விமர்சித்தார்.
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்தாலும், அந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனில் வன்முறைகள், சண்டைகள், சண்டையிடும் தகாத வார்த்தைகள் சமுதாயத்திற்கு ஆரோக்கியமற்றது என்று தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.