தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக தனது பணியை தொடங்கி தற்போது வளர்ந்து வரும் நடிகராக நல்ல நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் மணிகண்டன் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக வேறு பல படங்களிலும் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். 



வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து தற்போது தனது வெற்றியை ருசித்து வரும் நடிகர் மணிகண்டன் வாழ்க்கை தத்துவம் குறித்த தனது அபிப்பராயத்தை பகிர்ந்து கொண்டார். 27 வயதிற்கு பிறகு வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். அந்த சமயத்தில் வாழ்க்கை பளார் பளார் என அறைந்து ரியாலிட்டி என்ன என்பதை உணர்த்தும். அதற்கு முன்னர் வரையில் வாழ்க்கை கனவாகவே இருக்கும். எக்கச்சக்கமான என்ஜாய்மென்ட் இருக்கும். 


ஆனால் அதுவே 27 வயது பிறகு குறைந்துகொண்டே வரும். அதற்கு பிறகு தான் லைஃப் பற்றி சீரியஸான கேள்விகள் எல்லாம் வரும். யாரெல்லாம் நமக்கு வாத்தியர்களாக இருந்தார்களோ அவர்கள் இறந்துபோவார்கள்.


யாரை எல்லாம் பார்த்து வியந்து போனோமோ அவர்கள் அனைவரும் வயதாகி நரைத்து போய் காணப்படுவார்கள். நாமளும் அந்த வாழ்க்கைக்குள்ள போறோமோ என்ற கேள்வி வரும். 



சில ஆண்டுகளுக்கு முன்னர் இமாச்சல் பிரதேசத்துக்கு சென்று இருந்தேன். அங்கே யூகோஸ்லாவியா நாட்டை சேர்ந்தவர்களை நான் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் ஒரு இடத்துக்கு செல்ல வழி கேட்டார்கள். நானும் அந்த இடத்திற்கு புதிது தான் என்பதால் எனக்கும் தெரியாது என சொன்னேன். அந்த பேச்சுவார்த்தை அப்படியே தொடர்ந்து, நாங்கள் காபி ஷாப் போற அளவுக்கு பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அவர்கள் சொன்ன ஒரு விஷயம் மிகவும் வியப்பாக இருந்தது. 


நாங்கள் சொத்து சேர்த்து வைப்பது, வீடு வாங்கி வைப்பது எல்லாம் கிடையாது. வாடகை வீட்டில்தான் இருக்கிறோம். ஒரு ஆண்டு முழுவதும் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்து பணம் சம்பாதிப்பார்களாம். அடுத்த ஆண்டு இருவரும் சேர்ந்து ஊர் ஊராக சுற்றுவார்களாம். அவர்கள் இப்படி பேசுவதை பார்த்தால் இவர்கள் வாழ்வது எல்லாம் ஒரு வாழ்க்கையா என தோணும். அப்படி கிடையாது. 


”இந்த சொசைட்டி நம் மீது அழுத்தம் கொடுக்கிறது. 27 வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கணும், குழந்தை பெத்துக்கணும், வீடு கார் எல்லாம் வாங்கிடணும். அப்படினா உன்னோட வாழ்க்கை செட்டில் ஆகிடுச்சுன்னு அர்த்தம். அதற்கு பிறகு நிம்மதியா வாழலாம் என நம்மளாவே ஒரு குறிக்கோளை வளர்த்துக்குறோம். இதெல்லாம் செய்யாதவன் ஒருத்தன் இருப்பான்ல அவனுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்கிறார்கள். சரி நான் அப்படி செய்ய முடியல நீதான் எல்லாத்தையும் சாதிச்சிட்டல்ல.. நீ சந்தோஷமா இருக்கியா? என கேட்டால் அவனுக்கு பதில் சொல்ல தெரியாது. இது தான் வாழ்க்கை” என்றார் நடிகர் மணிகண்டன்.