அம்பேத்கராக நடித்த போது தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் பற்றி நடிகர் மம்மூட்டி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கடந்த 2000 ஆம் ஆண்டு ஜாஃபர் படேல் என்பவர் இயக்கிய டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் வெளியானது. இதில் இத்திரைப்படம், சட்டமேதை அண்ணல் பி.ஆர்.அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லியது. அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட  மக்களின் முன்னேற்றத்திற்காக எத்தகைய பங்களிப்பை அளித்தார் என்பது முதற்கொண்டு அந்த படத்தில் காட்டப்பட்டிருந்தது. அம்பேத்கர் படம் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வெளியாகியிருந்தது. 


இப்படம்  சிறந்த ஆங்கில திரைப்படம் , சிறந்த நடிகர் (மம்மூட்டி) மற்றும் சிறந்த கலை இயக்கம் (நிதின் சந்திரகாந்த் தேசாய்) ஆகிய 3 பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. ரூ.8.95 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்துக்கு  மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிர அரசு இணைந்து நிதி வழங்கியது. இப்படியான நிகழ்ச்சியில் அம்பேத்கராக நடித்தது பற்றி நடிகர் மம்மூட்டி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 






அதில் அவரிடம், ‘டாக்டர் அம்பேத்கராக நீங்கள் நடித்தது வரலாற்று தருணம். இந்தியாவில் பல மாநிலங்களில் அப்படத்தை திரையிடவே போராட்டம் இருந்தது. திரையிடவும் முடியவில்லை. ஆனால் அம்பேத்கர் படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டு பல பேர் பார்த்தோம். அதில் நடித்த தருணம், நீங்கள் பெற்ற உணர்வும் என்ன?’ என கேள்வியெழுப்பப்பட்டது. 


அதற்கு, ‘எனக்கு நியாபகம் இருப்பது ஒன்றே ஒன்று தான். படத்தின் ஷூட்டிங் புனே பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அப்போது நான் காட்சி ஒன்றில் நடிக்க அம்பேத்கர் வேடம் போட்டு வந்தேன். அந்நேரம் சிலர் காலில் விழுந்து வணங்கினார்கள். நான் இப்படியும் கூட ரசிகர்கள் எனக்கு இருக்கிறார்கள் என நினைத்தேன். பின்பு தான் அது  அம்பேத்கர் என நினைத்து காலில் விழுந்தார்கள் என்று தெரிந்தது. அம்பேத்கருக்கு அழிவே கிடையாது.அவர் என்றும் நினைவில் இருப்பார்’ என மம்மூட்டி தெரிவித்திருப்பார். இந்நிகழ்வின் போது நடிகர் கமல்ஹாசனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.