மம்மூட்டி


கடந்த 42 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வருகிறார் மம்மூட்டி. 400க்கும் மேற்பட்ட படங்கள் , வெவ்வேறு விதமான கதைகள் , எதார்த்தமான நடிப்பில் உச்சம் தொட்ட ஒரு நடிகர். கன்னூர் ஸ்குவாட்,  நண்பகல் நேரத்து மயக்கம் , காதல் தி கோர் , ப்ரமயுகம் , டர்போ என கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது திரை வாழ்க்கையை இன்னும் விஸ்தாரப் படுத்தி இருக்கிறார். 72 வயதை எட்டியிருக்கும் இளமை மாறாத மம்மூட்டி புதுப்புது கதைக்களங்களை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார். மம்மூட்டியின் சமீபத்திய நேர்காணல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது . இந்த நேர்காணலில் மம்மூட்டியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில் கவனத்தை ஈர்த்துள்ளது. 


என் கடைசி மூச்சுவரை சினிமாதான்


இந்த நேர்காணலில் மம்மூட்டியிடம் சினிமாவில் நீங்கள் செய்தது எல்லாம் போதும் இனி புதியாக செய்வதற்கு எதுவும் இல்லை என்று தோன்றியது உண்டா என்று மம்மூட்டியிடம் கேள்வி கேட்கப் பட்டது. இதற்கு “இல்லை எனக்கு ஒருபோதும் அப்படி தோன்றியதே இல்லை. சினிமா என்பது என் வாழ்க்கையில் ஒரு பகுதி இல்லை. என் வாழ்க்கையே சினிமாதான். எனக்கு சோர்வாக இருந்தது என்றால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்வேன். ஆனால் அடுத்த சில நாட்களில் என்னுடைய அடுத்த படத்தை எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவேன். சினிமா எனக்கு எப்போதும் சோர்வளித்தது இல்லை. அப்படி சினிமா எனக்கு சோர்வாகும் போது அதுவே என் கடைசி மூச்சாக இருக்கும்’ என்று மம்மூட்டி பதிலளித்துள்ளார். 


மக்கள் என்னை மறந்துவிடுவார்கள்


நீங்கள் எப்படி நினைவு கூறப்படுவீர்கள் என்று ஆசைப்படுகிறீர்கள் என்கிற கேள்வி மம்மூட்டியிடம் கேட்கபட்டபோது “ இந்த உலகம் எல்லா காலத்திற்கும் என்னை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்படவில்லை. அது சாத்தியமும் இல்லை. இந்த உலகம் குறைந்த பட்சம் என்னை 10 ஆண்டுகள் அல்லது ஒரு 50 ஆண்டுகளுக்கு நினைவில் வைத்துக்கொள்ளும். இந்த உலகம் எத்தனையோ மகத்தான மனிதர்களை பார்த்திருக்கிறது. ஆயிரக்கணக்கான நடிகர்களில் நானும் ஒருவன்.  இந்த உலகத்தை விட்டு சென்ற ஒரு சில ஆண்டுகள் மட்டுமே அவரை மக்கள் நினைவில் வைத்துக் கொள்வார்கள். அதற்கு பின் காலத்தால் மறக்கப் பட்டு விடுவார்கள். நானும் அதே மாதிரி காலத்தால் மறக்கப் பட்டு விடுவேன்” என்று மம்மூட்டி தெரிவித்துள்ளார். மம்மூட்டியின் ஆழமான பதில்கள் அவரது முதிர்ச்சியையும் சினிமாவின் மீது அவருக்கு இருக்கும் தீராத பற்றையும் எடுத்துரைக்கும் படியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்