நடிகர் மாதவன் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும், வெப் தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்தி படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்புக்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக்கில் இருக்கும் லே என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தற்போது கடுமையான மழை பெய்து வருகிறது. அங்கு காற்றாற்று வெள்ளத்தில் சிக்கி வைஷ்ணுதேவி கோயிலுக்கு சென்ற பலரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனமழையால் விமான போக்குவரத்து தடை பட்டுள்ளது. லே பகுதி முழுவதும் பனிபடர்ந்து அருகில் இருப்பவர்கள் கூட தெரியாத அளவுக்கு இருப்பதாக தெரிகிறது. விமான நிலையம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் மழையால் நடிகர் மாதவன் ஹோட்டல் அறைக்குள் முடங்கி கிடக்கிறார். வெளியே செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த கடினமான சூழலில் சிக்கி தவிக்கும் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "லடாக்கின் மலை உச்சியில் லே பகுதியில் இருக்கிறோம். கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழையால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விரைவில் வீடு வந்து சேர்வேன் என நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் லடாக்கிற்கு வரும்போது இதுபோன்று தான் நடக்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டு 3 இடியட்ஸ் படப்பிடிப்புக்கு வந்தபோது இதே போன்று ஆகஸ்ட் மாதம் முழுவதும் பனிப்பொழிவு இருந்தது. இதனால் படப்பிடிப்புக்காக காத்திருந்தோம். இப்போதும் அதே நிலைதான் இருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு பிறகு லேயில் சிக்கி இருக்கிறோம். விரைவில் வானம் தெளிவாகும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.