இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சனையை ஏன் யாரும் கவனிக்க மறுக்கிறார்கள்? என்று நடிகர் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.


சோனம் வாங்சுக்


 லடாக்கில் பொறியியலாளர் மற்றும் கல்வி சீர்திருத்தவாதியான சோனம் வாங்சுக் கடந்த மார்ச் 6 ஆம் தேதி முதல்  21 நாள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டார்.  லடாக் பகுதிக்கு மாநில உரிமை கோரியும் அப்பகுதியில் இயற்கை அழிவை ஏற்படுத்தும் அரசின் திட்டங்களை எதிர்த்தும் இந்தப் போராட்டத்தை அவர் தொடர்ந்தார். அவருடைய இந்தப் போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட லடாக் பகுதி மக்கள் கலந்துகொண்டார்கள்.


இந்த கோரிக்கைகளை இந்திய அரசு கருத்தில் கொண்டு ஒரு சமரசத்திற்கு வரவேண்டும் என்பதே அவருடைய நோக்கம் . ஆனால் 21 நாட்கள் கடந்தும் அரசு தரப்பில் இருந்து எந்த விதமான பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. இந்நிலையில் தனது அடுத்தக் கட்ட போராட்டத்தை விரைவில் தொடங்க இருக்கிறார் சோனம் வாங்சுக். 


பிரபலங்கள் ஆதரவு


கடும் குளிரில் சோனம் வாங்சுக் நடத்திய 21 நாள் போராட்டத்தை ஊடகங்கள் பொது ஜன கவனத்திற்கு கொண்டு வரவில்லை. ஒரு சில பிரபலங்கள் மட்டுமே இந்த விஷயம் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்கள். நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பிறந்தநாள் அன்று நேரில் சென்று சோன வாங்சுக்கை சந்தித்து இந்தப் போராட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் கிஷோர் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவித்தும் அவரது போராட்டை அலட்சியப் படுத்தும் அரசின்  போக்கையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.


ஓட்டு கேட்க வருபவர்களின் சட்டையைப் பிடிக்க தைரியமில்லையா ?






தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் கிஷோர் இப்படி பதிவிட்டுள்ளார். “ லடாக்கில் சுரங்கம் அமைக்கும் பெரு நிறுவனங்களிடம் இருந்து காப்பாற்ற சோனம் வாங்சுக் தனது 21 நாள் போராட்டத்தை முடித்துக் கொண்டார். இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சனையை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை ? அன்னா ஹஸாரே உண்ணா விரத போராட்டம் நடத்தியபோது 13 நாட்களில் சமசரத்திற்கு வந்த அரசு இப்போது எங்கே போய்விட்டது.  மக்களின் போராட்டத்தை அலட்சியப் படுத்துவதற்கு இந்த அரசியல்வாதிகளுக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது.


நிர்பயா வழக்கின் போது சாலையில் இறங்கி போராடிய மக்கள் இப்போது எங்கே சென்றுவிட்டார்கள். அழியும் நிலையில் லடாக் இருக்கும்போது விவசாயிகள் போராடி இறந்தபோது, மணிப்பூர் தீப்பற்றி எரிந்தபோது , மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானபோது, நமது காடுகள் நிலக்கரி கொள்ளையர்களால் சூறையாடப்பட்டபோது, பணமதிப்பிழப்பை நம் மேல் திணித்தபோதும் , பெட்ரோல் விலை உச்சத்திற்கு சென்றபோது, தலித் மற்றும் பழங்குடி மக்கள் அடக்குமுறைக்கு உள்ளானபோது, அரசின் இயலாமையால் மக்கள் உயிரிழந்த போது இப்படி ஒவ்வொரு காரணத்திற்காக போராடும் மக்களை தேசத் துரோகிகள் என்று பட்டம் கொடுப்பதற்கு பின் இருக்கும் காரணம் என்ன? 


உண்மையான பிரச்சினைகளை மறைத்து இந்துத்துவ பெருமிதத்தில் அரசு நம்மை மூழ்கடிப்பது தான் இந்த பிரச்சனைகளின் மேல் நாம் அக்கறை இல்லாமல் இருப்பதற்கு காரணம் ? அரசின்  தோல்விகளை மக்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய  ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்கள் தனது கடமையை செய்ய தவறியது தான் இதற்கு காரணமா? அல்லது இந்த நாட்டின் குடிமக்களான நாம் சார்பு எடுத்துக் கொண்டு கோழைகளாக மாறியது தான் காரணமா? நம் வீட்டிற்கு ஓட்டு கேட்டு வரும் இந்த சீர்கெட்டுப் போன அரசியல்வாதிகளின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கும் தைரியம் நமக்கு இல்லாமல் போய்விட்டதா? இந்த நாட்டை நாம் நேசிப்பது உண்மை என்றால் மீண்டு இதை செய்வதற்கான தைரியத்தை நம்மால் வரவழைத்துக் கொள்ள  முடியாதா என்ன ? “ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்