ஹேமா அறிக்கை


பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் போது அவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மலையாள சினிமாத் துறையில் அனைத்து நிலையிலும் உள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என மகளிர் குழு சார்பாக கேரள முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை கமிஷன் கடந்த 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 


கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த ஹேமா கமிஷன் தனது அறிக்கையை கேரள மாநில அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் நான்கு ஆண்டுகளாக இந்த அறிக்கையின் முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தனிநபர்களின் அடையாளங்களை தவிர்த்து சினிமாத்துறையில் பெண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் கடந்த சில தினங்கள் முன்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன.


சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் எல்லா பெண்களும் அட்ஜஸ்மெண்ட் செய்துகொள்ள வற்புறுத்தப்படுதவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நடிகர், இயக்குநர் , தயாரிப்பாளர் , என எல்லாரும் நடிகைகளை நிர்பந்திக்கும் சூழலே நிலவி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகாரளித்தால் நடிகைகளுக்கு மிரட்டல்களும் விடப்பட்டிருக்கின்றன படப்பிடிப்பு தளம் , போக்குவரத்து , தங்குவிடங்களில் இரவுகளில் நடிகைகளின் கதவுகளை தட்டுவது சினிமாத்துறையைச் சேர்ந்த ஆண்கள் வழக்கமாக வைத்துள்ளதாக இந்த அறிக்கை பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளது. 


 நடிகர் கருணாஸ் கருத்தால் சர்ச்சை


கேரள சினிமா மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் இந்த பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பாடகி சின்மயி இது குறித்து தொடர்ச்சியாக பேசி வருகிறார். சமீபத்தில் நடிகை சனம் ஷெட்டி தன்னை அட்ஜஸ்மெண்ட் செய்துகொள்ளும்படி பலர் வற்புறுத்துவதாகவும், அவர்களை திட்டி ஃபோனை கட் செய்வதாக தெரிவித்திருந்தார். இது குறித்து நடிகர் மற்றும் நடிகர் சங்க துணைத் தலைவரான கருணாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் அளித்துள்ள பதில் மேலும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. 


”அட்ஜஸ்மெண்ட் என்பது சினிமாவில் மட்டும்தான் உள்ளது என உங்களால் நிச்சயம் சொல்லிவிட முடியுமா? வேறு எங்கேயும் இல்லையா? அது இரண்டு பேர் சம்பந்தபட்ட தனிப்பட்ட விஷயம் . யாருடைய விருப்பமில்லாமல் இங்கு எதுவும் நடப்பதில்லை. ஹேமா அறிக்கை வெளியானபோது நான் வெளியூர் சென்றிருந்தேன். இது குறித்து தெளிவாக தெரிந்துகொண்டு விரைவில் பதில் சொல்கிறேன் “ என்று கருணாஸ் தெரிவித்துள்ளார். கருணாஸின் இந்த பதில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது