தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து மக்களிடம் நல்ல நகைச்சுவை நடிகர் என பெயர் வாங்கியவர் நடிகர் கருணாகரன். இருந்தாலும் இவரை அவ்வப்போதே படங்களில் பார்க்க முடிகிறது. இதற்கான காரணத்தை விஷ்ணு விஷால் நடித்துள்ள ஆர்யன் படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கருணாகரன் பேசினார்.
அதிகம் நடிக்காதது குறித்து கருணாகரன்
நீங்கள் ஒரு திறமையான நடிகர். அப்படியிருந்தும் உங்களை சமீப காலங்களில் அதிகம் படங்களில் பார்க்க முடியவில்லையே என ஆர்யன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நடிகர் கருணாகரன் " என்னுடைய முதல் படம் ‘கலகலப்பு’. அதன் பின் ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘யாமிருக்க பயமே!’ என்று தொடர்ந்து ஹிட் படங்கள். அதனால் சினிமா இப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். சில படங்கள் சரியாக செல்லாதபோது சினிமாவை விட்டு செல்ல வேண்டும் என நிறைய தடவை முடிவு எடுத்திருக்கிறேன். வெற்றியின் போது இருப்பது போல் தோல்வியின் போது சினிமா இருப்பதில்லை. வேறு மாதிரி நடத்துகிறார்கள். அப்போது விஷ்ணுதான் என்னைப் போன்ற திறமையான நடிகர்கள் எல்லாம் அப்படி சென்றுவிடக் கூடாது என கூறி, அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டு பட வாய்ப்புகள் கொடுத்து மீண்டும் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார். அடுத்த மாதம் கார்த்தியின் வா வாத்தியார் படத்தில் சந்திக்கலாம். அது இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு கண்டிப்பாக நன்றாக ஓடும்." என்று கூறினார்
அக்டோபர் 31 வெளியாகும் ஆர்யன்
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வடிகேடிவ் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரவீன் K. விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.