தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை என்ற படம் மூலமாக அறிமுகமான இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு நிகரான ரசிகர்களை கொண்டிருந்தார். ஆனால், 2000த்திற்கு பிறகு இவரது திரை வாழ்வு சறுக்கலைச் சந்தித்தது.
கார்த்திக் மீது குற்றச்சாட்டு:
இந்த சூழலில், தற்போது நடிகர் கார்த்திக் படப்பிடிப்புக்கு முறையாக வராதது குறித்து இயக்குனர் பாரதி கண்ணன், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. இந்த நிலையில், நடிகர் கார்த்திக் பல வருடங்களுக்கு முன்பு தான் சரியாக நடிக்க முடியாமல் இருப்பதற்கான காரணம் குறித்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நடிக்க வராதது ஏன்?
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, இதுதான் என்னுடைய கேரியர். இதை நான் நேசிக்க ஆரம்பிச்ச கட்டம். அந்த நேரத்துல வந்ததுதான் மெளனராகம். அதுல இருந்துதான் என் திரை வாழ்க்கை ஏறுமுகமானது. இந்த நேரத்தில் எனக்கு ஏராளமான தனிப்பட்ட பிரச்சினைகள். பல விஷயங்கள் ஒரே நேரத்தில் கூடி வந்த நிலையில் சில கட்டாய சூழ்நிலைகளால் என்னால் நடிக்க முடியாத ஒரு நிலை. நான் நடிக்கனும்னு ஒரு எண்ணம் இருந்தாலும் பல பல காரணங்கள், சில நல்லவர்கள் செய்த சில காரியங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு இடைவெளியை உண்டாக்கிவிட்டது.
இவ்வாறு அவர் அந்த காணொளியில் பேசியுள்ளார். இது கார்த்திக் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஆகும்.
நடிகர் கார்த்திக் படப்பிடிப்பிற்கு முன்பணம் வாங்கிவிட்டு முறையாக படப்பிடிப்பிற்கு வரவில்லை என்று பலரும் குற்றச்சாட்டை தற்போது முன்வைத்து வருகின்றனர். நடிகர் கார்த்திக் 100 படங்கள் வரை கதாநாயகனாக நடித்துள்ளார்.
17 ஆண்டுகளில் 100 படங்கள்:
1981ம் ஆண்டு அறிமுகமான கார்த்திக் 1998ம் ஆண்டு தனது 100வது படத்தில் நடித்தார். 17 வருடங்களில் 100 படங்களில் நடித்த கார்த்திக் 2000த்திற்கு பிறகுதான் முறையாக படப்பிடிப்பிற்கு வராதது போன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார்.
அலைகள் ஓய்வதில்லை, அக்னி நட்சத்திரம், கிழக்க வாசல், வருஷம் பதினாறு, பொன்னுமணி, பூவேலி மற்றும் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். அலைகள் ஓய்வதில்லை, நினைவெல்லாம் நித்யா, மெளன ராகம், கிழக்கு வாசல், வருஷம் பதினாறு, அக்னி நட்சத்திரம், பாண்டி நாட்டு தங்கம், பொன்னுமணி, பிஸ்தா, மேட்டுக்குடி போன்ற பல வெற்றிப் படங்களை அளித்துள்ளார்.