இந்தக் குடும்பத்துல இப்படியொரு ஆளாங்கிற மாதிரி செஞ்சுட்டேன் என்று நடிகர் கார்த்தி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவருக்கென்று தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.


இவர் கடந்த 2007ம் ஆண்டு பருத்திவீரன் என்ற படம் மூலமாக நாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இன்று வரை பல்வேறு தனித்துவமான படங்களில் நடித்து வருகிறார். நடிகர் கார்த்தி இதுவரை ஆயிரத்தில் ஒருவன், பையா, கைதி, கடைக்குட்டி சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று, காஷ்மோரா, சுல்தான், சிறுத்தை, கொம்பன் என்று இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். தற்போது கார்த்தி விருமன் படத்திலும், பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளார். அவை வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.


காஃபி வித் டிடி:
நடிகர் கார்த்தி காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த ஃப்ளாஷ்பேக் வீடியோவில் அவர் பல சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது: நான் சிறு வயதில் எதற்கெடுத்தாலும் என் அண்ணனை மாட்டிவிடுவேன். நான் ப்ளஸ் 2 படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அண்ணன் காலேஜ் படித்தார். அவர் செகண்ட் ஷோ சினிமாவுக்கு போய்ட்டு வந்தால் நான் மாட்டிவிடுவேன். அதேபோல், நான் ஒரு முறை சினிமாவுக்கு போனபோது என் காரின் பானட்டின் மீது ஒரு குடிகாரன் படுத்துக் கொண்டு வம்பிழுத்தார். முதலில் நானும் என் நண்பரும் காரிலிருந்து இறங்கி சண்டை போட்டோம். அந்த நபர் திடீரென நிமிர்ந்து டே மச்சான் என்றார். அங்கே 20 பேர் வந்து நின்றனர். உடனே நான் பயந்துபோய் அங்கிருந்து காரை எடுத்துவிட்டு வந்துட்டேன். இது மாதிரியான சமயங்களில் இடத்தைக் காலி செய்வதுதான் உண்மையான வீரம்.




இப்பவும் கூட ஏதாவது ஒரு பொண்ணைப் பார்த்தால் அட நல்லா இருக்காங்களேனு நினைப்பதுண்டு. இதில் பொய் சொல்லி என்ன ஆகப்போகிறது. அதுபோல் சூட்டிங் இடைவெளியில் கேரவானில் ஓய்வெடுக்கும் போது மனைவியிடம் நான் சூட்டிங்கில் இருக்கிறேன் என்று பொய் சொன்னதும் உண்டு. 


அப்புறம் நான் பள்ளிப் பருவத்தில் தம் அடித்திருக்கிறேனா என்று கேட்டீர்கள். அதை மட்டும் நான் செய்யவே இல்லை. ஆனால் நான் ஒரு முறை நீதிமன்றம் சென்று அபராதம் கட்டியிருக்கிறேன். அமெரிக்காவுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். இரண்டு நாட்கள் நயாகரா செல்வது திட்டம். இரண்டு கார்களில் சென்றோம். என் நண்பர் முன்னால் வேகமாகச் சென்றார். வழிதவறி விடக் கூடாதே என்று நானும் அதே வேகத்தில் சென்றேன். திடீரென சைரனுடன் எங்களை போலீஸ் சுற்றி வளைத்தது. என் தலையில் கையை வைத்து அழுத்தி காருக்குள் அமரச் செய்து நீதிமன்றத்துக்கு கூட்டிச் சென்றுவிட்டனர். அன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை வேற. விடுமுறையில் இருந்த நீதிபதியை வரவழைத்தனர்.


அந்தக் கோபமோ என்னவோ அவர் 250 டாலர் அபராதம் விதித்தார். கையில் பணம் இல்லை. அப்புறம் வங்கிக்குச் சென்று பணம் எடுத்துவந்து கொடுத்து வெளியே வந்தேன். இந்தக் குடும்பத்துல இப்படியொரு ஆளாங்கிற மாதிரி செஞ்சுட்டேன். ஆக்சுவலா 55 கி.மீ வேகத்தில் தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் 95 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதால் வந்த விளைவு அது.