நடிகர்கள் சூர்யா, கார்த்தி அண்ணன், தம்பியாக தமிழ்த் திரையுலகைக் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். நடிகர் சிவக்குமாரின் மகனான இவர்கள் இருவரும் இதுவரை இணைந்து நடிக்கவில்லை. ஆனாலும் கைதி திரைப்படத்தில் டில்லியின் குரல் கடைசியில் ரோலக்ஸாக வரும் சூர்யாவின் சில நிமிடங்களும் மாஸ் ரகம் தான். திரையில் டில்லியாகவும், ரோலக்ஸாகவும் கலக்கிய சகோதரர்கள் பால்ய வயதில் எப்படி இருந்தனர் என்பது பற்றி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் கார்த்தி.
அந்தப் பேட்டியில் கார்த்தி, ”சின்ன வயதில் எனக்கு ஸ்கூலுக்குப் போவது என்றால் ரொம்பவே பிடிக்கும். அதனால் நான் காலையில் சீக்கிரமாகவே எழுந்து டிப்டாப்பாக யூனிஃபார்மில் ரெடியாக சாப்பிட்டு கிளம்பிய தயாராக வெளியில் வந்து அமர்வேன். அப்போதுதான் அண்ணன் குளிக்கவே செல்வார். பள்ளிக்கூடத்தில் 8.15 மணிக்கு இருக்க வேண்டும். அவர் 8.15க்கு தான் கீழேயே இறங்கிவருவார்.
வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்ல 8.30 மணி ஆகிவிடும். அப்புறம் அங்கே லேட்டா வரும் அனைவரையும் ஒரு மரத்தின் கீழ் நிற்கச் சொல்வார்கள். அது ரொம்பவே கேவலமாக இருக்கும். மொத்த ஸ்கூலும் கிரவுண்டில் நிற்க ஒரு பத்து பேர் மட்டும் மரத்தடியில் நிற்போம். அப்பத்தான் அண்ணன் ஒரு பேட்ஜை வெளியில் எடுத்து சட்டையில் மாட்டுவார். அது என்னவென்றால் பள்ளிக்கு லேட்டாக வரும் நபர்களைப் பிடித்து வைப்பவர்களுக்கான பேட்ஜ். அவர் எங்களையெல்லாம் அக்யூஸ்ட் மாதிரியும் அவர் ஏதோ வார்டன் மாதிரியும், அதிகாரியாவும் மாறி கெத்து காட்டுவார். அவ்வளவுதான் எனக்கு அப்படியொரு கோபம் வரும்.
ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்புறம் லேட் கம்மர்ஸை கிரவுண்டில் ஒரு ரவுண்டு ஓடச் சொல்வார்கள். அந்த லேட் கம்மர்ஸில் டெய்லி யுவன் சங்கர் ராஜா இருப்பார். வாரத்தில் மூன்று நாளாவது நான் இருப்பேன். இப்படித்தான் ஸ்கூல் டேஸ் போச்சு” என கலகலப்பான பள்ளி நாட்களை பகிர்ந்தார் கார்த்தி.
தடம் பதித்த சூர்யா:
நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் என்ற அடையாளத்தோடு 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகிய சூர்யா இதுவரை நடிகர், சிறப்புத் தோற்றம் என 50 படங்களில் நடித்துள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்,நேருக்கு நேர் திரைப்படத்தில் முதலில் நடித்தது அஜித்-விஜய் தான். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, அதிலிருந்து விலகினார் அஜித்.இந்த காரணத்தால் தான் சூர்யா நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து நந்தா, உன்னை நினைத்து, பிதாமகன், மௌனம் பேசியதே, காக்க காக்க, பேரழகம், ஆய்த எழுத்து, கஜினி, சில்லுனு ஒரு காதல், சிங்கம், மாற்றான், சூரரைப்போற்று, ஜெய்பீம் என மறக்கமுடியாத படங்களில் நடித்துள்ளார். இதில் சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக வாடிவாசல், சிறுத்தை சிவாவுடன் ஒரு படம், விக்ரம் 3 ஆம் பாகம் என அடுத்தடுத்து தனது ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளார்.
மேலும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் தொகுப்பாளர், பல படங்களின் தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட சூர்யா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் சினிமா பயணத்தை அழகானது என்றும் ஆசிர்வதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் னவு காணுங்கள், நம்பிக்கை வையுங்கள் என தெரிவித்திருந்தார். நடிகர் சிவகுமாரின் மகன் என்பதால் சூர்யாவுக்கு சினிமா வாழ்க்கை எளிதாக அமையவில்லை. தனது தந்தைக்கு அவப் பெயரை சேர்க்கக்கூடாது என்பதில் சூர்யா தெளிவாக இருந்தார். கடின உழைப்பும் விடா முயற்சியும் அவரின் திறமையை மேலும் மெருகூட்டியது மட்டுமல்லாமல் ரசிகர்களையும் சேர்த்தது.
பருத்திவீரனாக அறிமுகமான கார்த்தி
சிவக்குமாரின் இளையமகனான கார்த்தி கடந்த 2007 ஆம் ஆண்டு பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுகப்படமா இது என்று கேட்கும் அளவுக்கு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார் அவர். ஆயிரத்தில் ஒருவன் (2010), மெட்ராஸ் (2014) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.மேலும் மணிரத்னம் இயக்கும் பாென்னியின் செல்வன் நடித்துள்ளார். வரும் 30ஆம் தேதி இத்திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.