தமிழ்நாடு காவல் துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துகொண்டார்.
தொடர்ந்து இந்த விழாவில் கார்த்தி பேசியதாவது:
”இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருள்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனைப் பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர்.
பள்ளிகளுக்கு அருகே கூட போதைப்பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள் தான். அதனை விற்பவரும் புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள் தான். ஆக நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும். மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
இது சீரியஸான விஷயம். போதைப்பொருட்களில் ஆர்வத்தைக் காட்டுவதற்கு பதிலாக, இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும்”இவ்வாறு கார்த்தி பேசினார்.
முன்னதாக நடிகர் சந்தானத்துடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா படப்பிடிப்பு தளத்தில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கார்த்தி பகிர்ந்திருந்தார். கரீனா சோப்ரா எனும் கதாபாத்திரத்தில் கார்த்தி இப்படத்தில் பெண் வேடத்தில் நடித்திருந்த நிலையில், இப்பாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், கார்த்தி பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ஜப்பான் திரைப்படம்
நடிகர் கார்த்தி நடித்து வரும் ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்த ‘சர்தார்’ படம் வெளியானது. இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார்.
ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். அனு இம்மானுவேல், தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் வரும் 2023ஆம் ஆண்டு தீபாவளிக்கு வரும் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி கார்த்திக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.