கல்கி 2898 AD (Kalki 2898 AD)


பிரபாஸ்  நடித்துள்ள கல்கி 2898 படம் வரும் ஜூன் 27-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வைஜயந்தி மூவீஸ் தயாரித்து நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் , ரானா டகுபதி , தீபிகா படூகோன் , கமல்ஹாசன் , ஷோபனா , அனா பென் , திஷா பதானி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் , இந்தி , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. படம் ரிலீஸை நெருங்கும் நிலையில் படக்குழுவினர் மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.


இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடுகர் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் , நடிகர் பிரபாஸ் , கமல்ஹாசன் , ரானா டகுபதி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உலக நாயகன் கமல்ஹாசன் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.


படத்தில் கமலின் லுக்


கல்கி படத்தின் டிரைலர் வெளியானபோது கமலின் தோற்றம் அனைவராலும் பேசப் பட்டது. தன்னுடைய கதாபாத்திரத்திற்கு இப்படியான ஒரு தோற்றத்தை முடிவு செய்தது குறித்து கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பேசினார் “ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கான லுக் குறித்து நானும் இயக்குநரும் நிறைய பேசினோம் .  இதுவரை நான் நடித்திராத வேறு யாரும் நடித்திராத ஒரு லுக்காக இது இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். அப்போது தான் எனக்கு ஒரு ஐடியா வந்தது. என்னுடைய கதாபாத்திரத்திற்கு என உடல்முழுவதும் மூடி ஆடைகள் அணியலாம் என்று முடிவு செய்தேன். அதுவரை படத்தின் எந்த காட்சியையும் நான் பார்க்கவில்லை. பிறகு தான் நான் நினைத்த கெட் அப்பில் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார் என்று சொன்னார்கள். சரி இரும்பால் செய்த ஆடைகளை அணிந்து வரலாம் என்று நினைத்தேன் அதுதான் படத்தில் பிரபாஸ் அணியும் உடை என்றார்கள். தீபிகா படூகோன் கர்ப்பிணியாக நடித்திருக்கிறார்.  நான் கர்ப்பிணியாக நடிக்க விரும்பவில்லை. இல்லையென்றால் அதைகூட செய்திருப்பேன். 


இந்த லுக்கிற்காக நாங்கள் லாஸ் எஞ்சலஸ் சென்றோ. ஒரு சில முயற்சிகள் தோல்வியடைந்தப் பின் கடைசியாக இந்த லுக்கை முடிவு செய்தோம். டிரைலரைப் போல் படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்” என கமல் தெரிவித்துள்ளார்


எனக்கு வில்லனாக நடிக்க தான் ஆசை


தொடர்ந்து பேசிய கமல் “ எனக்கு எப்போதும் வில்லனாக நடிக்க வேண்டும் என்கிற அசை இருந்திருக்கிறது. பொதுவாக படத்தில் ஹீரோக்கள் என்றால் அவர்கள் ஹீரோயின்களுக்காக காத்திருக்க வேண்டும் , பாடல்களுக்கு நடனமாட வேண்டும். ஆனால் ஒரு வில்லனுக்கு அந்த கட்டாயம் எல்லாம் இல்லை. தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எல்லாம் ஒரு வில்லன் செய்யலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் இந்தப் படத்தில் நாக் அஸ்வின் எனக்கு வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்.  நான் ஒரு முனிவர் மாதிரி தான் இந்தப் படத்தில் இருக்கிறேன்” என்று கமல் தனது கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்