தக் லைஃப்
நாயகன் படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னம் கமல் இணைந்துள்ள படம் தக் லைஃப் . த்ரிஷா , அபிராமி , சிம்பு , ஜோஜூ ஜார்ஜ் , அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாக இருக்கிறது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தக் லைஃப் ஓடிடி ரிலீஸ்
தக் லைஃப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. விக்ரம் படத்தைத் தொடர்ந்து கமலுக்கு இப்படம் மிகப்பெரிய கமர்சியல் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது. தமிழ்நாடு , கேரளா , மும்பை என படத்திற்கு பல்வேறு மாநிலங்களில் ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள் படக்குழு. அந்த வகையில் நேற்று மே 20 ஆம் தேதி மும்பையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் தக் லைஃப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை கமல் பகிர்ந்துகொண்டார்.
56 நாட்களுக்குப் பின் ஓடிடியில் தக் லைஃப்
தற்போது வரை ஒரு படம் திரையரங்கில் வெளியாகிய 28 நாட்களுக்குப் பின்னே ஓடிடியில் வெளியாகிறது. ஓடிடி ரிலீஸை 4 வாரங்களில் இருந்து 8 வாரங்களாக அதிகரிக்க பல நாட்களாக திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வந்தார்கள். அந்த வகையில் தற்போது தக் லைஃப் படத்திற்கு அந்த சிறப்பு சலுகையை அளித்துள்ளது ஓடிடி நிறுவனம். திரையரங்கில் வெளியாகி 56 நாட்களுக்குப் பின்னரே அதாவது 8 வாரங்களுக்குப் பின்னரே இப்படம் ஓடிடியில் வெளியாக ஓடிடி நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். இந்த முடிவை ஓடிடி நிறுவனமே முன்வந்து எடுத்ததற்காக கமல் நன்றி தெரிவித்துள்ளார். தக் லைஃப் படத்தின் ஓடிடி ரிலிஸ் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளம் ரூ 150 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.