லோகேஷ் இயக்கத்தில் ரஜினி கமல் 

கூலி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி கமல் இணைந்து நடிக்க இருப்பதாக அண்மயில் தகவல் வெளியாகியிருந்தது. துபாயில் நடைபெற்ற சைமா 2025 விருதுவிழாவில் கமல் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார்

உறுதிபடுத்திய கமல்

46 ஆண்டுகளுக்குப் பின் ரஜினிகாந்த் கமல் கூட்டணி இணைய இருக்கும் தகவல் உண்மையா என கமலில் கேட்டனர். இதுகுறித்து கமல் கூறுகையில் " தரமான சம்பவம் என்று சொல்கையில் தான் ஆபத்தே இருக்கிறது. ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு முன் படம் தரமாக இருக்கு என்று சொல்லக் கூடாது. பிறகு படம் பிடிக்கவில்லை என்றால் தர தரவென்று இழுத்துவிடுவார்கள். முதலில் நாங்கள் செய்துகாட்டுகிறோம். அவர்களுக்கு பிடித்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே.  நாங்கள் சேர்ந்து ரொம்ப நாளாகிவிட்டது. ஆனால் விரும்பி பிரிந்திருந்தோம். ஒரு பிஸ்கெட்டை உடைத்து இருவருக்கு கொடுத்து வந்தார்கள். ஆளுக்கு ஒரு பிஸ்கெட் சாப்பிட நினைத்தோம். அதை வாங்கி நல்லா சாப்பிட்டோம் . இப்போது மறுபடியும் அரை பிஸ்கெட் போதும் என்று நினைக்கிறோம். அதனால் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறோம்.  எங்களுக்குள் போட்டி என்பது நீங்கள் ஏற்படுத்திவிட்டது தான். ஆனால் எங்களுக்கு இது பெரிய விஷயம் இல்லை. ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதால் தான் இத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்தோம். நாங்கள் இணைந்து நடிப்பது  தொழில் ரீதியாக வேண்டுமானால் பெரிய விஷயமாக இருக்கலாம் ஆனால் எங்களைப் பொறுத்தவரை இப்போதாவது நடக்கிறதே என்று சந்தோஷம் தான். எங்கள் இருவரது படங்களை நாங்களே தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை எப்போதுமே எங்களுக்கு இருந்தது. இப்போதாவது நடக்கட்டும் ." என கமல் கூறியது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்பரித்தனர். 

1975 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள்  ரஜினி கமல் முதல் முறையாக இணைந்து நடித்தனர்.  தமிழ் , மலையாளம் , இந்தி , கன்னடம் , தெலுங்கு என ஐந்து மொழிகளில் 21 படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். 1979 ஆம் ஆண்டு நினைத்தாலே இனிக்கும் படத்தில் இந்த கூட்டணி கடைசியாக இணைந்து நடித்தது. தற்போது 46 ஆண்டுகளுக்குப் பின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.