மலையாளத் திரையுலகின் பிரபலமான நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம், தனது 7 வயதில் 'அந்திகாட்டின் கொச்சு கொச்சு சந்தோஷங்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவர் நடித்த  'என்டே வீடு அப்புவின்டேயம்' என்ற படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். 


 



தமிழில் அறிமுகம் :


2016ம் ஆண்டு 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, விக்ரம், பாவக் கதைகள் உள்ளிட்ட  படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 


திருமண நிச்சயம் :


காளிதாஸ் ஜெயராம் - பிரபல மாடல் தாரிணி காலிங்கராயர் இருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் தான் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் பெற்றோர்களின் சம்மதத்துடன் பிரமாண்டமாக நடைபெற்றது. பல திரைப் பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். 


தேசிய விருது அனுபவம் :


இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தான் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமிடம் இருந்து தேசிய விருது பெற்ற போது நடந்த அனுபவம் குறித்த ஸ்வாரஸ்யமான நிகழ்வு குறித்து பகிர்ந்து இருந்தார். 


"தேசிய விருது வாங்க செல்வதற்கு முன்னர் நான் அணிந்து இருந்த கோட்டில் ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டேன். ஜனாதிபதி விருது வழங்குகிறார் என்றால் ஏராளமான ப்ரோடோகால் இருக்கும். மேடை ஏறியதும் விருதை வாங்கிக்கொண்டு அப்படியே கீழே இறங்கி விட வேண்டும். நான் நேராக  ஜனாதிபதியிடம் சென்று விருது வாங்குவதற்கு முன்னர் கோட்டுக்குள் கையை விட்டேன். இவன் என்னவோ  பண்ண போகிறான் என நினைத்து அங்கிருந்த அனைவரும் மிரண்டு போனார்கள். 


 



கோட்டுக்குள் கையை விட்டு பேப்பரை எடுத்ததும் அனைவரும் அதைப் பார்த்து சிரித்து விட்டார்கள். அப்துல் கலாம் ஐயா என்னைக் கட்டிப்பிடித்து வாழ்த்தினார். கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் மேடையில் நின்று அவருடன் பேசினேன். இதுவரையில் தேசிய விருது வென்ற யாருக்குமே அந்த வாய்ப்பு கிடைத்ததில்லை" என தன்னுடைய நெகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் காளிதாஸ் ஜெயராம். 


மேலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குழந்தை நட்சத்திரமாக இருந்த காளிதாஸ் உடன் பேசுகையில், அவரது லட்சியம் குறித்து விசாரித்துள்ளார். “இன்னும் முடிவு செய்யவில்லை” என காளிதாஸ் பதில் அளிக்க, “எதை செய்தாலும் அதில் முழு மனதுடன் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்” என அறிவுரை கூறி அனுப்பியுள்ளார். தொடர்ந்து தான் எடுத்துச் சென்ற பேப்பரில் அப்துல் கலாமின் கையெழுத்தை வாங்கிக் கொண்டு வந்துள்ளார் காளிதாஸ் ஜெயராம்.  காளிதாஸ் ஜெயராமின் இந்த அனுபவப் பகிர்வு சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.