படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் தன் மகனை தொங்கவிட்ட இயக்குநரை நடிகர் பாண்டியராஜன் திட்டிய நிகழ்வை, பிரபல நடிகர் சுகுமார் பகிர்ந்துள்ளார். 

Continues below advertisement

கடந்த 2009ம் ஆண்டு பிரித்வி பாண்டியராஜன் நடிப்பில் வெளியான படம் “வைதேகி”. ஜெமினி ராகவா இயக்கிய இந்த படத்தில் மதுசந்தா, ஜெமினி ராகவா மற்றும் கார்த்திகா அடைக்கலம், காதல் தண்டபாணி , பல்லவி , தாடி பாலாஜி, காதல் சுகுமார், பெஞ்சமின் என பலரும் நடித்திருந்தனர். . ஸ்ரீகாந்த் தேவா இப்படத்துக்கு இசையமைத்தார். இந்த படம் கிளைமேக்ஸ் காட்சி பற்றி நடிகர் காதல் சுகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Continues below advertisement

பதறிப்போன நடிகர் பாண்டியராஜன் 

அதாவது, “ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் அதிர்ச்சி .. நிஜமாகவே காதலர்களை  தொங்கவிட்ட இயக்குநர்...இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன்  மகன் பிருத்வி நாயகனாக நடித்த படம் வைதேகி.. நானும் நண்பனாக நடித்தேன். கிளைமாக்சில் காதலர்களை காதல் தண்டபாணி கயிற்றில் கட்டி நீர்வீழ்ச்சியில் தொங்கவிட்டு கயிற்றை வெட்டிவிடுவதாக காட்சி எடுக்கப்பட்டது. இதில் தவறினால் ஒன்றும் தேறாது. உதவி இயக்குநராக அப்போது பணியாற்றிய தொரட்டி படத்தின் இயக்குநர் மாரிமுத்து இயக்குநரிடம், சார் இப்படி தொங்கவிடுவது ரிஸ்க் சார்.. உயிரோட விளையாட வேணாம். இந்த ஷாட்டை சீட் பண்ணி எடுக்கலாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.

நாங்களும் சொல்லிப் பார்த்தோம். ஆனால் இயக்குனரோ இந்தப் படத்தில் இதுதான் முக்கியம் ... இதைப் பார்க்கும் காதலர்களுக்கு காதலிக்கவே கூடாது அப்படிங்கிற எண்ணம் வரணும். அவர்களைப் பாதுகாப்பாகத்தான் கட்டி இருக்கோம் என்று மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் மாரிமுத்து பாண்டியராஜனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துவிட்டார். சென்னையில் இருந்து உடனடியாக கிளம்பி 5 மணி நேரத்தில் குடும்பதோடு ஷூட்டிங் ஸ்பாட் வந்த பாண்டியராஜன்  பதறி இயக்குநரிடம் சண்டைக்குப் போய் விட்டார்.

யோவ் நீ படமும் பண்ணவேண்டாம். ஒன்னும் பண்ண வேண்டாம். ஒழுங்கா என் பையனை இறக்கி விடு  என்று அடிக்காத குறையாக சொல்ல பிரித்வியை இறக்கிவிட்டார்கள். அதற்குள் ஏறக்குறைய இயக்குநர் தான் எடுக்க நினைத்ததை காட்சிப்படுத்தி விட்டார். ஆனாலும் அந்தக் காட்சியை பார்க்கும்போது பதட்டமாக இருக்கும்.மகன்கள் மேல் மிக்க அளவுகடந்த பாசம் கொண்டவர் பாண்டியராஜன். அவருடன் 5 படங்கள் நடித்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

பிருத்வி ராஜனின் சினிமா வாழ்க்கை

பிருத்வி 2006ம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கிய கை வந்த கலை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து நாளைய பொழுது உன்னோடு, வைதேகி, பதினெட்டாம் குடி எல்லை ஆரம்பம், வாய்மை, முப்பரிமாணம், சகா, லாபம், டிஎஸ்பி ஆகிய படங்களில் நடித்தும் ஒரு நிலையான இடத்தைப் பெற முடியவில்லை. இப்படியான் நிலையில் கடைசியாக பிருத்வி முக்கிய கேரக்டரில் நடித்த ப்ளூ ஸ்டார், பராசக்தி, கர ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.