பட ப்ரொமோஷன் பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ள பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜின் பாஸ்போர்ட் மற்றும் 15 லட்ச ரூபாய் பணம் திருட்டுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் ஜோஜு ஜார்ஜ்.
மலையாள சினிமா தாண்டியும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஜோஜூ ஜார்ஜ், தமிழில், ஜகமே தந்திரம், பஃபூன், இணைய ஆந்தாலஜி தொடரான புத்தம்புது காலை ஆகியவற்றில் நடித்துள்ளார்.


மேலும் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ள லியோ பட்த்திலும் ஜோஜூ ஜார்ஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.




தற்போது மலையாளத்தில் ஜோஷி இயக்கியுள்ள ஆண்டனி எனும் படத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன், நடிகர் செம்பன் வினோத் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படம் வரும் செப்டெம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள படக்குழு, தற்போது லண்டன் சென்றுள்ளது. 


அங்கு ப்ரொமோஷன் பணிகளை முடித்து விட்டு ஜோஜூ ஜார்ஜ், கல்யாணி பிரியதர்ஷன், படத்தின் தயாரிப்பாளர் ஜஸ்டின், நிர்வாக தயாரிப்பாளர் சிஜோ ஜோசஃப் ஆகியோர் கார்களில் ஷாப்பிங் சென்ற நிலையில், காரிலேயே பாஸ்போர்ட், பர்ஸ் உள்ளிட்ட பொருள்களை வைத்துச் சென்றுள்ளனர்.


இந்நிலையில், ஷாப்பிங் முடித்து வந்து பார்த்தபோது, நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் சிஜோ ஜோசஃப்  ஆகியோரது பாஸ்போர்ட்கள் திருட்டுபோனது தெரியவந்துள்ளது. மேலும் ஜோஜூ ஜார்ஜ் வைத்திருந்த 15 லட்ச ரூபாய் பணமும் திருட்டுபோயுள்ளது.


இந்நிலையில், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் ஜோஜூ ஜார்ஜ், சிஜோ ஜோசஃப் இருவருக்கும் தற்காலிக பாஸ்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்து தந்துள்ளது.


முன்னதாக ஜோஜூ ஜார்ஜ்  ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள புலிமடா படத்தின் டீசர் வெளியாகி கவனமீர்த்தது. பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ள நிலையில், நடிகை லிஜோ மோலும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


முன்னதாக ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான இரட்டா, துறமுகம் படங்கள் மலையாள சினிமா ரசிகர்கள்  தாண்டியும் பாராட்டுகளை அள்ளி அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளன.


மேலும் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நயட்டு படத்துக்காக ஜோஜூ ஜார்ஜ் தேசிய விருது வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. 


மேலும் படிக்க: Celebrities Onam Celebration: அடிப்பொலி ஓணம்... மாஸ் காண்பித்த நடிகர்கள்... க்யூட் சொல்ல வைத்த நடிகைகள்... ஃபோட்டோ கலெக்‌ஷன்!