நடிகர் ஜீவா நடித்துள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படம் ரிலீசான 3 நாட்களில் வசூல் மழை பொழிந்து வருவது அப்படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தலைவர் தம்பி தலைமையில் படம்
மலையாளத்தில் பிரபல இயக்குநராக திகழும் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியாகியிருக்கும் படம் “தலைவர் தம்பி தலைமையில்”. இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இளவரசு, தம்பி ராமையா, பிரார்த்தனா நாதன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். கண்ணன் ரவி தயாரித்துள்ள இந்த படமானது முதலில் ஜனவரி 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஜனநாயகன் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதால் தலைவர் தம்பி தலைமையில் படம் பொங்கலுக்கு வெளியீட முடிவானது. அதன்படி இந்த படம் ஜனவரி 15ம் தேதி வியாழக்கிழமை வெளியானது. 2 மணி மட்டுமே ஓடக்கூடிய இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
நான் - ஸ்டாப் காமெடி
படத்தின் ஆரம்பம் தொடங்கி இறுதி வரை நான் ஸ்டாப் காமெடி என்ற பாணியில் தலைவர் தம்பி தலைமையில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் முதல் காட்சியில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றதால் படக்குழு, ஜீவா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக நீண்ட நாட்களாக ஒரு வெற்றியை எதிர்பார்த்திருந்த ஜீவாவுக்கு இப்படம் கம்பேக் ஆக அமைந்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜீவா தியேட்டருக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?
இதனிடையே தலைவர் தம்பி தலைமையில் படம் பாக்ஸ் ஆபீஸில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கலுக்கு பராசக்தி, வா வாத்தியார் படங்கள் வெளியானாலும் மக்கள் இந்த படத்தைக் காண குடும்பம் குடும்பமாக படையெடுத்து வருகின்றனர்.
இந்த படம் முதல் நாளில் ரூ.1.5 கோடி வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. படம் பற்றி பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவ தொடங்கியதும் 2ம் நாளில் வசூல் ரூ.2.7 கோடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து 3வது நாளில் இப்படம் ரூ.4.20 கோடி வசூலை ஈட்டியுள்ளது. கிட்டதட்ட ஒவ்வொரு நாளும் படத்தின் வசூல் 80 சதவிகிதம் வரை எகிறியுள்ளது. இன்று பொங்கல் விடுமுறையின் கடைசி நாள் என்பதால் வசூல் நிலவரம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ தலைவர் தம்பி தலைமையில் படம் நினைத்த வெற்றியைப் பெற்று விட்டது என சொல்லலாம்.