தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான ஜெயம் ரவி அடுத்ததாக இயக்குநராகும் எண்ணத்தை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரவி. இப்படத்தின் பெயர் 20 ஆண்டுகளை கடந்தும் அவருடன் ஒட்டிக் கொண்டு தனி அடையாளமாக மாறிவிட்டது. எங்கு சென்றாலும் “ஜெயம்” ரவி என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். இப்படியான நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் “சைரன்” படம் வெளியாகியிருந்தது. அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார். 


இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி, அழகம்பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதர், ஜீனி, தக் லைஃப் உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. இதில் தக் லைஃப் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் ஜெயம் ரவி நடிக்கவுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இயக்குநராகும் ஜெயம் ரவி 


இதனிடையே சமீபகாலமாக தான் இயக்குநராகும் ஆசையை சில நேர்காணல்களில் ஜெயம் ரவி தெரிவித்து வந்தார். அந்த வகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “நான் 3 கதைகளை எழுதியிருக்கேன். ஒரு படத்தில் யோகிபாபு தான் கண்டிப்பாக ஹீரோவாக நடிக்கிறார். அது உறுதியாகி விட்டது. என்னிடம் இருந்த ரூ.500ஐ அட்வான்ஸாக கொடுத்து விட்டேன். அந்த சமயம் என்னிடம் பாக்கெட்டில் அவ்வளவு தான் இருந்தது. தொடர்ந்து யோகி பாபு படங்களில் கமிட்டாகி வருவதால் உறுதி செய்து விட்டேன்.


இன்னொரு படத்தில் நான் தான் நடிக்கிறேன். அதில் என்னை விட்டால் யாரும் சரியாக இருக்காது என தோன்றுகிறது. அந்த கதையை இன்னொருவரிடம் புரிய வைத்து வேலை வாங்குவது கடினமான ஒன்றாக தான் இருக்கும். அதில் என்னையவே செட் செய்து பார்த்து விட்டேன். 3வது கதையில் யார் வேண்டுமானாலும் செய்யலாம். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தான். ஒரு சௌகரியமான இடத்தில் இருந்து விட்டேன். அதிலிருந்து வெளியே வந்தவுடன் அந்த கனவு நனவாகும். கூடிய விரைவில் இயக்குநராக வருவேன். ஒருவேளை இந்த ஆண்டே அதற்கான அறிவிப்பு வெளியாகலாம்” என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


ஏற்கனவே ஜெயம் ரவியின் அப்பா மோகன் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர், எடிட்டராக இருந்தவர். அவரது அண்ணன் மோகன் ராஜா பல வெற்றி படங்களை இயக்கியவர். இப்படியான நிலையில் ஜெயம் ரவியும் இயக்குநராக உள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. 




மேலும் படிக்க:Siragadikka Aasai: காசுக்காக முத்து செய்த காரியம்.. ஸ்ருதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - சிறகடிக்க ஆசையில் இன்று!