நான் தேடும் செவ்வந்திப் பூவிது.. அந்த நாள் பார்த்து அந்தியில் பூத்தது.. இளையராஜாவின் இசையில் ஜீவிதாவின் அழகு காக்கிச் சட்டையைக் கடந்து நிரம்பி வழியும்.
1980-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஒரு ரவுண்டு கட்டிய நடிகை ஜீவிதா. ஜீவிதா பிரபல நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துகொண்டார். இந்த நட்சத்திர தம்பதியின் மகள் சிவாத்மிகா. இவர் தான் தற்போது தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். தமிழில் ஏற்கெனவே கமல் மகள்கள் அக்ஷரா, ஸ்ருதி, ராதா மகள்கள் துளசி, கார்த்திகா, மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் என நிறைய வாரிசு நடிகைகள் நடித்து பெயர் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த வரிசையில் இப்போது சிவாத்மிகா இணைந்திருக்கிறார்.
ஶ்ரீனிதி சாகர் தயாரிக்கும், இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடிக்கிறார். ஆர்.கார்த்திக் இயக்குகிறார். சூர்யாவுடன் சூரரைப் போற்று படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா பாலமுரளி, ரிதுவர்மா ஆகிய மேலும் 2 கதாநாயகிகளும் இதில் நடிக்க உள்ளனர். காதல் தத்தும்பும் இப்படத்தில் சிவாத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார்.
நடிகை ஜீவிதா நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். இவர் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் கூட தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.சேசு, சத்யமேவ ஜெயதே, எவடந்தே நாகேண்டி, மகாங்களி என 4 தெலுங்குப் படங்களை இயக்கி இருக்கிறார். கலைத்துறையில் தனது பண்முகத்தன்மையை நிரூபித்தவர் ஜீவிதா. இவரது கணவர் ராஜசேகர். இந்த தம்பதியின் அன்யோன்யம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. தனது மனைவி குறித்து, ராஜசேகர் ஒரு பேட்டியில் "என்னோட எல்லா தாழ்வு மனப்பான்மையில இருந்தும் என்னை மீட்டு எடுத்தா. ஜீவிதா பக்கத்துல இருந்தா யானை பலம் வரும் எனக்கு " என சொல்லியிருப்பார்.
அண்மையில், இந்த தம்பதிக்கும் அவர்களின் இரு மகள்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. 4 பேருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டனர். ஜீவிதா ராஜசேகர் குடும்பம் ஒரு மகிழ்ச்சியான குடும்பம் என்பது கோலிவுட், டோலிவுட் வட்டாரங்கள் நன்கு அறிந்த செய்தியே. எல்லா திரை விழாக்களிலும் இவர்களை குடும்பத்துடன் பார்க்கலாம். ஜீவிதா குடும்பப் புகைப்படங்கள் ஏராளமாக கூகுளில் காணக்கிடைக்கிறது. ஜீவிதா தனது குடும்பத்தாருடன் கடந்த 2015ல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த புகைப்படம் சற்று பிரபலமானது. இதைவைத்து அவர் அரசியலில் இணையப்போகிறார் என்றெல்லாம் கூட தகவல் வெளியானது.
ஜீவிதாவின் இரண்டு மகள்களுமே அம்மாவைப்போல் திருத்தமான அழகு கொண்டவர்கள்தான். இப்போது, சிவாத்மிகா திரைக்களத்தில் இறங்கியிருக்கிறார். தாய், தந்தையைப் போல் இவரும் தனது திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.