தமிழ் சினிமாவின் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் ஜீவன் மீண்டும் நடிக்க வரும் நிலையில், தன்னுடைய குடும்பத்தினரே சினிமாவில் வளர உதவி செய்வது இல்லை என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் மிரட்டிய ஜீவன்

தமிழில் யுனிவர்சிட்டி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஜீவன். அந்த படம் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவதாக சூர்யா நடித்த காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். இதனைத் தொடர்ந்து திருட்டுப் பயலே, நான் அவன் இல்லை ஆகிய இரண்டு படங்களும் ஜீவனை உச்சத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. ஆனால் அதன்பிறகு அவர் நடித்த மச்சக்காரன், நான் அவன் இல்லை 2, தோட்டா ஆகிய படங்கள் சரிவை சந்திக்க ஜீவன் சினிமாவில் இருந்து காணாமல் போனார். இதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் 2015ம் ஆண்டு அதிபர் , 2024ம் ஆண்டு பாம்பாட்டம் படம் ஆகிய இரு படங்கள் மட்டுமே வெளியானது. 

Continues below advertisement

இப்போது பல வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் லவ்வர் பாய் படம் மூலம் நடிக்க வந்துள்ளார். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். அர்ஜித் சங்கர், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் ஜீவனுக்கு மிக முக்கிய கேரக்டர் அளிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோ ஆகியவை இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. 

குடும்பத்தினர் கூட உதவவில்லை

இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய ஜீவன், “நான் திண்டுக்கலை பூர்வீகமாக கொண்டவன். சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா, அண்ணன் ஆகியோர் கண்ஸ்ட்ரக்‌ஷன், இண்டஸ்ட்ரீஸ் தொழிலில் இருக்கிறார்கள். நடிகர் சூர்யாவோடு ஒன்றாக படித்தேன். அவரின் காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்தபோது ஆச்சரியப்பட்டார். நான் சினிமா தான் எதிர்காலம் என நினைத்தது கிடையாது. காலத்தின் போக்கிலேயே நான் சென்றேன். யுனிவர்சிட்டியில் ஹீரோ, காக்க காக்க படத்தில் வில்லன் என யோசிக்காமலேயே நடித்தேன். 

நான் நடிச்ச அத்தனை படங்களுமே எனக்கு  மன திருப்தியை கொடுத்தவை. எனக்கு பிடித்து தான் நான் ஓகே சொல்லி நடிப்பேன். சில படங்கள் சரியாக போகவில்லை. அதனைப் பற்றி பேச விரும்பவில்லை. என் படங்களில் நான் அவன் இல்லை ரொம்ப ஸ்பெஷல். அதேபோல் இப்போது முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஏஜிஎஸ் தனது முதல் படமாக திருட்டுப்பயலே தயாரித்தது. அதுவும் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. 

சினிமா பின்புலம் இல்லாத நிலையில் எங்க வீட்டிலும் நான் சினிமாவில் நல்லா வரட்டும் என எந்த உதவியும் செய்தது இல்லை. குடும்ப தொழிலை நான் கவனிக்கவில்லை என்ற வருத்தம் இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். அவர் மீண்டும் நல்ல கேரக்டரில் நடித்து கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.