தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஹீரோக்களில் ஒருவராக கொண்டாடப்படும் நடிகர் ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படம் வெளியாகி இன்றோடு எட்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.


அறிமுக இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா, விடிவி கணேஷ், பூனம் பாஜ்வா, வம்சி கிருஷ்ணா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.  டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றிருந்தது. 


ரசிக்க வைத்த கதை


பணக்கார பையனைக் காதலித்து வசதியாக வாழவேண்டும் என்று நினைக்கும் விமானப் பணிப்பெண் தவறான புரிதல் காரணமாக நடுத்தர குடும்பத்து பையன் ஜெயம் ரவியை பணக்காரன் என நினைத்து காதலித்து விடுகிறார். ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வரும்போது ஹன்சிகா ஜெயம் ரவி உடனான காதலை முறித்துக் கொள்கிறார். ஆனால் ஜெயம் ரவியால் காதலை சாதாரணமாக விட்டு விட முடியவில்லை. இதற்கிடையில் ஹன்சிகாவுக்கும் தொழிலதிபருமான வம்சி கிருஷ்ணாவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடக்கிறது. தன் காதலை இழக்க விரும்பாத ஜெயம் ரவி ஹன்சிகாவுக்கு அதனை எப்படி புரிய வைத்தார் என்பதை இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டு இருந்தது. 


இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற காரணம் தினம் தினம் நம்மை சுற்றிலும், நம் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்களை காட்சிகளாக வைத்திருந்தது தான் என சொல்லலாம். குறிப்பாக ஜெயம் ரவி பணக்காரன் இல்லை என தெரிந்ததும் அவரது காதலை ஹன்சிகா முறித்துக் கொள்ளும் வந்த காட்சி படம் பார்ப்பவர்களுக்கு ஒரு விதமான கோபத்தை ஏற்படுத்தும். அந்த அளவுக்கு அந்த கேரக்டரில் இருவரும் கச்சிதமாக செய்திருந்தனர். 


இந்த படத்தின் இரண்டாவது பிளஸ் பாய்ண்டாக பாடல்கள் அமைந்தன. தூவானம், டண்டனக்கா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி, அரக்கி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.இந்தப் படத்தின் கதை இதற்கு முன்னால் தமிழ் சினிமாவில் மிகவும் பார்த்து பார்த்து சலித்த ஒரு கதை என்ற போதிலும் வித்தியாசமான காட்சிகளால் அதனை ரசிக்கும்படி படமாக்கி இருந்தார் இயக்குனர் லக்‌ஷமன். இந்த படத்துக்கு பின் ஜெயம் ரவி - ஹன்சிகா - லக்‌ஷ்மன் கூட்டணி ‘போகன்’ என்னும் படத்தில் மீண்டும் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.