நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி பதிலளிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ் சினிமாவிலும், அரசியல் வட்டாரத்திலும் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த பேச்சு தான் மேலோங்கியுள்ளது. நீண்ட நாட்களாக அரசியலுக்கு வரும் திட்டத்தோடு செயல்பட்டு வந்த விஜய், கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கும் வண்ணம் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். “தமிழக வெற்றி கழகம்” என பெயரிடப்பட்ட கட்சி தான் இன்றைய ஹாட் டாபிக் ஆக உள்ளது. 


முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் கட்சி, எதிர்கட்சி என யாரை பார்த்தாலும் விஜய் அரசியல் பயணம் பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் முன்வைக்கிறார்கள். அதற்கு சம்பந்தப்பட்ட பிரபலங்கள் கருத்தும் தெரிவிக்கிறார்கள். இப்படியான நிலையில் விஜய்யின் அரசியல் வருகைக்கு சினிமா மற்றும் அரசியல் களத்தில் ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது. 


இப்படியான நிலையில் விஜய் கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி பதிலளிக்க மறுத்துள்ளார். திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய் கட்சி தொடங்கியது பற்றி சக நடிகராக என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, “கோயில் வச்சி இந்த கேள்வி கேட்டால் எப்படி? - என் படத்தை பற்றி கேள்வி கேளுங்கள் சொல்கிறேன்” என பதிலளித்தார். 


இதனைத் தொடர்ந்து அவரிடம் அடுத்தடுத்த படங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நான் அடுத்தாக சைரன் படத்தில் நடிக்கிறேன். அப்படம் பிப்ரவரி 16 ஆம் தேதி ரிலீசாகிறது. அதன் பிறகு பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை, தக் லைஃப் படம் மணிரத்னத்துடன் பண்ணுகிறேன்”  என ஜெயம் ரவி பதிலளித்தார். இந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


ஜெயம் ரவியின் ‘சைரன்’


அந்தோணி பாக்கியராஜ் அறிமுக இயக்குநராக இயக்கியுள்ள படம் ‘சைரன்’ இந்த படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி. வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள சைரன் படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியாகவுள்ள சைரன் படத்தின் ட்ரெய்லர் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் ஜெயம் ரவி ஆம்புலன்ஸ் ட்ரைவராகவும், கீர்த்தி சுரேஷ் போலீசாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.