இந்தியன் 2


கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. காஜல் அகர்வால் , ரகுல் ப்ரீத் , பிரியா பவாணி சங்கர் , சித்தார்த் , பாபி சிம்ஹா , எஸ்.ஜே சூர்யா , ஜகன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தியன் 2 படத்தில் நடித்துள்ள நடிகர் ஜகன் கமலுடன் நடித்த அனுபவங்களைப் பற்றி தனியார் ஊடக நிகழ்ச்சியில் பேசியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


கமலின் குருபக்தி


கமலுடன் உரையாடிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் போது ஜகன் இப்படி கூறியுள்ளார் ‘ உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இருந்தவர்களுக்கு தெரியும் ஒரு நாள் கூட பாலச்சந்தர் மற்றும் நாகேஷ் பற்றி பேசாமல் இருக்கமாட்டார். நான் தூங்காவணம் படத்தில் கமலுடன் 18 நாட்கள் இருந்திருக்கிறேன். ஒரு நாள் கூட தன்னுடைய குரு பாலச்சந்தர் பற்றி அவர் பேசாமல் இருந்ததில்லை. அப்படி அவரே மறந்துவிட்டாலும் செட்டில் இருப்பவர்கள் ‘என்ன மணி 5 ஆச்சு இன்னும் நாகேஷ் பாலச்சந்தர் பற்றி பேசவில்லையே’ என்று விளையாட்டாக சொல்வதுண்டு. கமலின் குரு பக்தி அப்படிப் பட்டது. அதனால் தான் பாலச்சந்தர் இறந்தபோது கவிதாலயாவில் அவருக்கு சிலை வைக்கவில்லை. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தான் அவருக்கு சிலை வைத்தது. “ என்று ஜகன் தெரிவித்துள்ளார். 






செட்டிற்கு வரும்போதே கமல் சேனாபதியாக மாறிவிடுவார்


இந்தியன் 2 படத்தின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நடிகர் ஜகன் பகிர்ந்துகொண்ட போது இப்படி கூறியுள்ளார். “கமல் சேனாபதி கெட் அப் போட்டு செட்டிற்கு நடந்து வந்தார். அவரை பார்த்தபோது எனக்கு கமலுக்கு ரொம்ப வயதாகிவிட்டதே அவர் நடையில் ரொம்பவும் தளர்ச்சி ஏற்பட்டு விட்டதே என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பின் ஒரு சீன் எடுத்தார்கள். மூன்றாவது டேக்கில் ஷங்கர் ஓகே சொல்லிவிட்டார். உடனே அதில் நடையை மிஸ் செய்துவிட்டேன் என்று கமல் இன்னொரு டேக் எடுக்கலாம் என்றார். அப்போது தான் தெரிந்தது கமலுக்கு வயதாகவில்லை கெட் அப் போட்டு அவர் செட்டிற்குள் நுழையும்போதே சேனாபதியாக மாறிவிடுகிறார் என்று. நான் தான் கமலுக்கு வயதாகிவிட்டதாக தவறாக புரிந்துகொண்டேன்.” என ஜகன் தெரிவித்துள்ளார்.