சாய் பல்லவி என்றால் யாருக்குதான் பிடிக்காது. ஒரு நடிகர் என்கிற கர்வம் எங்கும் இல்லாமல் சிரித்த முகத்தோடு இருக்கும் அவரது குணம், மலர் என்கிற நம் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு கதாபாத்திரம், இத்தனைக்கும் மேலாக அவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நடிகை.
நமக்கு சாய் பல்லவியை பிடித்தால் நமது சமூக வலைதளத்திலோ அல்லது அவரது ட்விட்டர் அல்லது இன்ஸ்டா கணக்கில் போய் அவருக்கு ஒரு ஹார்ட் விடலாம், அவரது புகைப்படத்தை வால்பேபர் ஆக வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு நடிகருக்கு சாய் பல்லவியைப் பிடித்தால் அதை அவர் யாரிடம் சொல்வார். அதை எப்படி அவரால் வெளிகாட்ட முடியும். அப்படியே அவர் சொன்னாலும் அவரது உணர்வுகள் நேர்மையானவை என்று எடுத்துக்கொண்டு அதனை பரபரப்பான செய்தியாக பேசாமல் நம்மால் இருக்க முடியுமா?
அப்படி ஒருத்தர் இருக்கிறார். சாய் பல்லவிமேல் தனக்கு இருக்கும் க்ரஷை மிக தயக்கத்துடன் வெளிப்படுத்திருக்கிறார் அவர். அவரது பெயர் குல்ஷன் தேவையா.
அதிகம் கேள்விப்பட்டிராத பெயராக இருக்கிறதில்லையா? ஷைதான், ஹண்டர், ஹேட் ஸ்டோரி ஆகியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நெட்ஃப்ளிக்ஸில் வெளிவந்த கோஸ்ட் ஸ்டோரீஸிலும் நடித்திருக்கிறார் குல்ஷன்.
அண்மையில் ஒரு நேரலையில் கலந்துகொண்ட குல்ஷன், சாய் பல்லவி மேல் தனக்கு ஒரு பெரிய க்ரஷ் இருப்பதாகவும் ஆனால் இதனை அவரால் சொல்ல முடியவில்லை என வருந்தியுள்ளார் நம் குல்ஷன். இந்த முறையாவது உண்மையைக் கொட்டிவிட வேண்டும் என்று தீர்மானித்தவர் போல் படபடவென்று தன் மனதில் இருந்த பாரத்தை எல்லாம் இந்த நேர்காணலில் இறக்கி வைத்திருக்கிறார் குல்ஷன்.
“ சில காலமாகவே சாய் பல்லவி மேல் எனக்கு ஒரு மிகப்பெரிய க்ரஷ் இருக்கிறது. அவரது அலைபேசி எண் என்னிடம் இருக்கிறது. ஆனால் அவரை அணுக எனக்கு தைரியம் வரவில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகர் மற்றும் டான்சர். இது வெறும் ஒரு க்ரஷ்தான் என்று நினைக்கிறேன். சில நேரங்களில் நான் அவரிடம் ஈர்க்கபடுவது உண்மைதான். அதே நேரத்தில் அவர் ஒரு பிரமாதமான நடிகர். என் வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரு படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். மற்றது பற்றி எனக்கு தெரியவில்லை (மற்றது என்று எதை சொல்கிறார் குல்ஷன் என்று உங்களுக்கும் தோன்றுகிறதா?). இது நடக்கலாம் நடக்காமலும் போகலாம். மற்றபடி எதுவும் இல்லை. ஒரு நல்ல நடிகருடன் ஒரு முறையாவது இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதில் யாருக்குத்தான் மகிழ்ச்சி இருக்காது.” எனத் தெரிவித்தார்.
குல்ஷனின் இந்த பேச்சு ஒரு டீன் ஏஜ் வாலிபனின் மனதை பிரதிபலிப்பதாக ரசிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.