தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. இவரது மனைவி சாந்தி. இவர் இன்று காலமானார். இவரது மறைவு கவுண்டமணிக்கும், குடும்பத்தினருக்கும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திரையுலகினரும் கவுண்டமணியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
சாப்பிட கூப்பிட்ட மனைவி:
இந்த நிலையில், நடிகர் கவுண்டமணி ஒரு முறை தனது மனைவியிடம் செல்லமாக கோபித்துக்கொண்டது குறித்து கீழே காணலாம். பெரும்பாலும் பிரபலங்கள் சென்னையில் படப்பிடிப்பு நடந்தால் வீட்டிலே சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். கவுண்டமணி தனது நெருங்கிய நண்பரும் , நடிகருமான சத்யராஜுடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, கவுண்டமணிக்கு வீட்டில் இருந்த அவரது மனைவி வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார். சத்யராஜ் உடன் இணைந்து படப்பிடிப்பு தளத்திலே சாப்பிட்டு விடுகிறேன் என்று கவுண்டமணி தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு அவரது மனைவி சாப்பாடு வீண் ஆகிவிடும் வந்து சாப்பிட்டு விட்டு போங்கள் என்று கூறியுள்ளார்.
கோபித்துக் கொண்ட கவுண்டமணி:
இதனால், சற்றே கோபத்துடன் போனை வைத்த கவுண்டமணியிடம் சத்யராஜ் என்னவென்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த கவுண்டமணி, என்னமோ சிங்கத்தை அடிச்சு குழம்பு வச்ச மாதிரியும், புலியை அடிச்சு சமைச்ச மாதிரியும் பேசிட்டு இருக்காங்க. கொஞ்சுண்டு சாப்பாடு, கொஞ்சுண்டு கீரை அதுக்கு இந்த பேச்சு பேசுறாங்க என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட சத்யராஜ் வாய்விட்டு சிரித்துள்ளார். இதை சத்யராஜே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மனைவி மீது மிகுந்த பிரியம் கொண்ட கவுண்டமணி அவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். 1963ம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் கவுண்டமணி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கவுண்டமணி மனைவி மறைவுக்கு நடிகர் சத்யராஜ், செந்தில், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
சர்வர் சுந்தரம் படம் மூலமாக திரையுலகில் அறிமுகமான கவுண்டமணி, பாரதிராஜா படம் மூலமாக பிரதான நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தன்னுடைய வித்தியாசமான பேச்சு, உடல்மொழி காரணமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன், விஜய், அஜித், பிரசாந்த், சிம்பு என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது வயது மூப்பு உள்ளிட்ட பல காரணங்களால் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார். இவரும் செந்திலும் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் மிகவும் பிரபலம் ஆகும்.