தமிழ் சினிமாவில் லேட்டஸ்ட் காதல் ஜோடியாக வலம் வந்த கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இன்று திருமணம் செய்துக் கொண்டனர்.
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இவர் 90 காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிய நடிகர் கார்த்திக்கின் மகனாவார். இதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மகாதேவ், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்,தேவராட்டம் , ஆனந்தம் விளையாடும் வீடு என பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதேபோல் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மஞ்சிமா மோகன் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப்ஐஆர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் நடித்திருந்தனர்.
அதில் இருந்தே இந்த ஜோடி காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலை கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி இருவரும் உறுதி செய்தனர். காதல் தொடர்பாக இருவரும் பதிவிட்ட சமூகவலைத்தளப்பதிவும் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 23 ஆம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கௌதம் - மஞ்சிமா நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று திருமணம் செய்துக் கொண்ட கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த தம்பதியினருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.