ஃபகத் ஃபாசில்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஃபகத் ஃபாசில் , மலையாளத்தில் மகேஷிண்ட பிரதிகாரம் , அன்னையும் ரசூலும் , ஜோஜி , மாலிக் , என பல சிறந்த படங்களில் நடித்துள்ளார். தமிழில் வேலைக்காரன் , சூப்பர் டீலக்ஸ் , மாமன்னன் ஆகிய படங்களிலும் தெலுங்கில் புஷ்பா படத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ஆவேஷம் படத்தில் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தனது ஏ.டி,எச்.டி என்கிற கவனக்குறைவு பாதிப்பு இருப்பதாக ஃபகத் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது
ஏ.டி.எச்.டி (ADHD)
ADHD என்பதன் முழு விரிவாக்கம் Attention deficit/hyperactivity disorder. வெகுஜன பரப்பில் இது ஒரு நோய் என்று அறியப்பட்டாலும் உண்மையில் ஏ.டி.எச்.டி என்பது ஒரு மூளையின் நரம்புகளில் ஏற்படும் ஒரு மாற்றமே, குறைபாடே ஆகும். இந்த நரம்பியல் மாற்றத்திற்கு உள்ளானவர்களால் ஒரே விஷயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது. எளிதில் திசைத்திரும்பக் கூடிய தன்மையுடையவர்களாக அவர்கள் இருப்பார்கள்.
அதிக சுட்டித்தனம், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை, அவசர குணம் போன்ற பொதுவான அறிகுறிகளை இந்த நிலையால் பாதிக்கப்பட்டவர்களில் பார்க்கலாம்.
இந்த நிலை இருப்பதை குழந்தை பருவத்திலேயே அடையாளம் கண்டுகொண்டால் பயிற்சிகளின் உதவியுடம் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் ஞாபக மறதி, அன்றாட வேலைகளை செய்வதில் சிரமப்படுபவர்களாக இருப்பார்கள்.
நம்மைச் சுற்றி இருக்கும் பல பிரபலங்கள் இந்த நரம்பியல் மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களே. 28 முறை ஒலிம்பிக்ஸின் பதக்கம் வென்ற மைக் ஃபெல்ப்ஸ், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் , ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் உள்ளிட்டவர்களை உதாரணமாக குறிப்பிடலாம்.
தனது 41 வயதில் தனக்கு ஏ.டி.எச்.டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஃபகத் ஃபாசில் தெரிவித்துள்ளது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரீசன்
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகும் படமே மாரீசன். வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்து வருகிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. மாமன்னன் படத்தைப் போல் சீரியஸாக இல்லாமல் ஃபீல் குட் படமாக இப்படம் உருவாகி வருகிறது.