இனாரிட்டு படத்தை மறுத்த ஃபகத் ஃபாசில்
பிரபல மெக்சிகன் திரைப்பட இயக்குநர் அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இனாரிட்டு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தனக்கு வந்ததாகவும் ஆனால் இந்த பட வாய்ப்பை தான் மறுத்துவிட்டதாக நடிகர் ஃபகத் ஃபாசில் தெரிவித்துள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 கிராம்ஸ் , அமொரோஸ் பெரோஸ் , பேபல் , ரெவனண்ட் , பர்ட்மேன் போன்ற படங்களை இயக்கி உலகளவில் ரசிகர்களை கொண்டிருப்பவர் இனாரிட்டு. தொடர்ச்சியாக இரு ஆஸ்கர் விருதுகளை வென்றவர்.
'ஆடிஷனில் என்னை தேர்வு செய்துவிட்டார்கள். ஆனால் மொழி அவர்களுக்கு ஒரு கவலையாக இருந்தது. இதற்காக மூன்று மாதங்கள் என்னை மொழி பயிற்சி எடுத்துக்கொள்ள சொன்னார்கள். அதுவும் சம்பளமே இல்லாமல். அவ்வளவு சிரமப்பட எனக்கு இஷ்டம் இல்லை அதனால் நான் அந்த படத்தின் வாய்ப்பை மறுத்துவிட்டேன். " என்று ஃபகத் ஃபாசில் தெரிவித்துள்ளார்
பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஃபாசிலின் மகன் ஃபகத் ஃபாசில். 2002 ஆம் ஆண்டு இவர் நாயகனாக அறிமுகமான படம் தோல்வியை தழுவியது மட்டுமில்லாமல் இந்த படத்தில் ஃபகத் ஃபாசிலின் நடிப்பு கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து 7 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகியே இருந்து படிப்பை தொடர்ந்தார். 2009 ஆம் ஆண்டு முதல் மீண்டும் நடிப்பிற்கு திரும்பி ஃபகத் நடித்த படங்கள் கவனமீர்க்கத் தொடங்கின.
இன்று இந்திய சினிமாவில் குறிப்பிடத் தகுந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார் ஃபகத் ஃபாசில். தமிழில் வேலைக்காரன் , மாமன்னன் , சூப்பர் டிலக்ஸ் , சமீபத்தில் மாரீசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மாரீசன் ஓடிடி ரிலீஸ்
ஃபகத் ஃபாசில் , வடிவேலு இணைந்து நடித்துள்ள மாரீசன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.