உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த பிரபல நடிகர் ‘என் உயிர் தோழன்’ பாபு இன்று உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


சமீபகாலமாக திரையுலகில் பிரபலங்களின் மரணம் என்பது தொடர்கதையாகி வருகிறது. சினிமா என்பது தமிழ் மக்களின் உணர்வில் கலந்துவிட்ட நிலையில், சம்பந்தப்பட்டவர்களின் மரணம் தனிப்பட்ட இழப்பாகவே அனைவராலும் கருதப்பட்டுகிறது. இப்படியான நிலையில் இந்த மாதத்தில் பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, இயக்குநர் மாரிமுத்து இருவரும் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். 


இந்த சோகம் மறைவதற்குள் பிரபல நடிகர் பாபு இன்று உயிரிழந்தார். இவர் தமிழ் சினிமா ரசிகர்களால்  ‘என் உயிர் தோழன்’ பாபு என்று அறியப்படுகிறார். 1990ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில்  ‘என் உயிர் தோழன்’ படம் வெளியானது. தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபுவை ஹீரோவாக்கி அழகு பார்த்தார் பாரதிராஜா. 'குயிலுக் குப்பம்... குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன’, `ஏ ராசாத்தி... ரோசாப்பூ’ ஆகிய பாடல்கள் கூட இந்த படம் பற்றிய அறியாதவர்கள் மத்தியில் பிரபலமானது. 






இதனைத் தொடர்ந்து விக்ரமன் இயக்கத்தில் ‘பெரும்புள்ளி’ ,  ‘பொண்ணுக்கு சேதி வந்தாச்சு’, ‘தாயம்மா’ ஆகிய படங்கள் வெளியான நிலையில், ‘மனசார வாழ்த்துங்களேன்’ படத்தில் நடித்து வந்தார் பாபு. இந்த படத்தில் ஒரு சண்டை காட்சியில் மாடியில் இருந்து குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்கு டூப் பயன்படுத்திக் கொள்ளலாம் என படக்குழுவினர் தெரிவித்த நிலையில் இந்த சண்டை காட்சியில் ரிஸ்க் எடுத்து நடிப்பதாக கூறி  நிலைதடுமாறி விழுந்தார். இதில் அவருடைய முதுகுப்பகுதியில் பலத்த அடிப்பட்டது.


அவருக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதும் பாபுவால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை. அந்த ஒரு சண்டை காட்சி அவரின் சினிமா வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டு விட்டது.கிட்டதட்ட 20 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த பாபுவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் பாரதிராஜா நேரில் சந்தித்து நலம் விசாரித்து கண் கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலானது. அவரை அன்று முதல் இன்று வரை வயதான தாயார் மட்டுமே கவனித்து வந்தார்.


இப்படியான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாபுவின் உடல்நிலை மோசமானது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் பாபு இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாபுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இயக்குநர் பாரதிராஜா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். 


அதில், “திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த " என் உயிர் தோழன் பாபு " வின் மறைவு  மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல " என தெரிவித்துள்ளார்.