விஜய் சூர்யா இணைந்து நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடு ஆக இருக்கிறது. இன்று இப்படத்தின் ரீரிலீஸ் டிரைலர் சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் நடிகர் ரமேஷ் கண்ணா நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா காதல் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்
ஃபரண்ட்ஸ் திரைபடம் ரீரிலீஸ்
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
சூர்யா ஜோதிகா காதலுக்கு தூது சென்றேன்
நடிகர் ரமேஷ் கண்ணா பேசுகையில், "இந்தப் படத்தின் இயக்குநர் சித்திக் அவர் எழுதிய வசனங்களை தவிர வேறு எந்த வசனங்களையும் நடிகர்கள் பேச அனுமதிக்க மாட்டார். நான் அவருடன் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறேன். ஸ்கிரிப்டில் இருக்கும் டயலாக்கை தவிர வேறு ஒரு வசனத்தை நடிகர்கள் பேசினால் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்த படத்தில் இடம்பெற்ற 'ஆணியே புடுங்க வேணாம்' எனும் டயலாக் கோகுல கிருஷ்ணாவும், டைரக்டர் சித்திக் சாரும் எழுதிய டயலாக் தான். இந்தப் படத்தில் நான் பேசும் 'ஆடு நடந்தது... மாடு நடந்தது..' என்ற வசனம் மட்டும் தான் அவர் அனுமதித்த எக்ஸ்ட்ரா டயலாக். அதற்கும் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு இது ஒரு கல்ட் கிளாசிக் டயலாக் என நான் விளக்கம் சொன்ன பிறகு ஒப்புக்கொண்டார்.
ப்ரண்ட்ஸ் படப்பிடிப்பு நடந்த போது நானும், சூர்யாவும் கலகலப்பாக பழகினோம். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது அவரும், ஜோதிகாவும் காதலித்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் தூது சென்றிருக்கிறேன்.
இந்தப் படத்தில் தேவயானி கதாபாத்திரத்திற்காக முதலில் ஜோதிகாவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு சிம்ரனிடம் பேசினார்கள். இறுதியில் தேவயானி தான் நடித்தார். அப்போது அவருக்கு ஒரு அதிர்ஷ்டம் இருந்தது. 'காதல் கோட்டை' படத்திலிருந்து அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றி. அவர் சார்பாகவும் வாழ்த்து தெரிவிக்கிறேன்,'' என்றார்.