சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது உடல்நலம் தேறிவரும் இயக்குநர் பாரதிராஜாவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகரும் இயக்குநருமான மனோபாலா பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத, முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா முன்னதாக நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆல்டர்ட் சென்சோரியம் (நுரையீரல் பாதிப்பு) பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை தேறி செப்டம்பர் 9ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படார். தொடர்ந்து வீடு திரும்பிய பாரதிராஜா வீட்டிலிருந்தபடியே சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் முன்னதாக பாரதிராஜாவை அவரது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்த மனோ பாலா அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

பாரதிராஜா பட்டறையில் இருந்து வந்த மனோபாலா ’என் குரு’ என அவரைக் குறிப்பிட்டு அருகே அமர்ந்திருக்கும் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.

 

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தன் திரை வாழ்வைத் தொடங்கிய மனோபாலா, நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்.

1982ஆம் ஆண்டு வெளியான ’ஆகாய கங்கை’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான மனோபாலா , அடுத்தடுத்து பல படங்களில் இயக்குநராக களம் கண்டவர். இதுவரையில்  40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். இது தவிர 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக தான் பாரதிராஜாவுடன் பணியாற்றியது குறித்து நினைவுகூர்ந்து மனோ பாலா நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார்.

 

அதில், ”பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தேன். இப்போ நடக்குற சமுதாயப் பிரச்சனை அப்போதும் இருந்தது. எல்லோரும் பாரதிராஜாவிடம், ”அவன்கிட்ட ஜாக்கிரதையா இரு! அவனை சேர்த்தா உனக்கு ஆபத்து” னு சொன்னாங்க. ஆனால் அதையும் தாண்டி என்னை பாரதிராஜா சேர்த்துக்கிட்டாரு” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.